கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக ஏப்ரல் 14ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில், பேருந்து, மெட்ரோ ரயில், ஆட்டோ, டாக்சி ஆகியவற்றின் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்லும் போக்குவரத்து அனைத்துமே நிறுத்தப்பட்டுள்ளது. 

இதனால் ரயில்வே துறைக்கு சொந்தமான 13,523 ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் உடன் ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ், மண்டலங்கள் மற்றும் கோட்டங்களின் பொது மேலாளர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது காலியாக இருக்கும் ரயில் பெட்டிகளை கொரோனா அவசர சிகிச்சை வார்டுகளாக மாற்றுவது குறித்து பரிசீலிக்கும் படி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். 

நாடு முழுவதும் காட்டுத் தீயை போல கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த இக்காட்டான சூழலில் கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது என்பது நெருக்கடியான ஒரு விஷயமாக மாறியுள்ளது. 

அதற்கு சரியான வழி கூறும்படி பிரதமர் மோடி அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது ரயில்வே துறை சார்பில் கொடுக்கப்பட்ட ஆலோசனைகள் மத்திய அரசின் பரிசீலினையில் உள்ளன. கொரோனா பாதித்துள்ள நாடுகளில் ஆயிரம் பேருக்கு 3 படுக்கைகள் என்ற வீதத்தில் வசதிகளை ஏற்படுத்தும் படி உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.