பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளி என தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரும், சாமியாருமான குருமீத் ராம் ரஹீம் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். 15 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கு கடந்த வந்த பாதையை பார்க்கலாம்.

2002, ஏப்:

சிர்சா நகரில் உள்ள தேரா சச்சா சவுதா ஆசிரமத்தில் சாமியார் ராம் ரஹீமால் பெண் பக்தர்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்று பஞ்சாப்  மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு முகவரி இல்லாத கடிதம் ஒன்று வந்தது.

2002, மே:

சிர்சா மாவட்ட நீதிபதிகள் இந்த கடிதத்தின் அடிப்படையில் ேதரா சச்சா சவுதா ஆசிரமத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

2002, செப்:

தேரா சச்சா சவுதா ஆசிரமத்தில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு இருப்பதற்கான முகாந்திரம் இருப்பது மாவட்ட நீதிபதி விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்தது.

2002, டிசம்:

தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் சாமியார் குருமீத் ராம் ரஹீம் மீது கற்பழிப்பு மற்றும் மிரட்டல் வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்தது.

2007, ஜூலை:

பஞ்சாப் அம்பாலா நீதிமன்றத்தில் சாமியார் குருமீத்துக்கு எதிராக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் சாமியாரின் இரு பெண் சீடர்களை கடந்த 1999, 2001ம் ஆண்டு அவர் பாலியல் பலாத்காரம் செய்தார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

2008, செப்.:

சாமியார் குருமீத்துக்கு எதிராக ஐ.பி.சி. 376 பிரிவின் கீழ் கற்பழிப்பு மற்றும் மிரட்டல் 506 ஆகிய பிரிவின் கீழ் சி.பி.ஐ. குற்றச்சாட்டு பதிவு செய்தது.

2009,2010:

நீதிமன்றம் முன், பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

2011, ஏப்:

இந்த வழக்கின் விசாரணையை அம்பாலா நீதிமன்றத்தில் இருந்து பஞ்சகுலாவில்உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது உயர் நீதிமன்றம்.

2017, ஜூலை:

இந்த வழக்கின் விசாரணையை நாள்தோறும் நடத்தப்படும் என சி.பி.ஐ. நீதிமன்றம் அறிவித்தது.

2017, ஆக.:

சாமியார் குருமீத் மற்றும் அரசு தரப்பில் வாதங்கள் முடிந்தன. இதையடுத்து, சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றம் ஆகஸ்ட் 25-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தது. அந்த நேரத்தில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குருமீத் ராம் ரஹீம் நேரில் நீதிமன்றத்துக்கு வரவும் உத்தரவிடப்பட்டது.

2017, ஆக 25.:

பாலியல் வழக்கில் சாமியார் குருமீத் குற்றவாளி என சி.பி.ஐ. நீதிமன்றம் அறிவித்தது.

2017, ஆக 28: சாமியார் குருமீத் மீதான பாலியல் வழக்கில் தண்டனை விவரம் வரும் 28-ந்தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.