மலையாள இதழ் ஒன்றில் குழந்தைக்கு பாலூட்டுவது போன்ற அட்டைப் படத்திற்கு எதிரான வழக்கை, கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம், கேரள நாளிதழான கிருஹலட்சுமியில், மாடலும் எழுத்தாளருமான ஜிலு ஜோசப், குழந்தைக்கு பாலூட்டுவது போன்ற அட்டைப்படம் வெளியானது. உற்றுப் பார்க்காதீர்கள்... நாங்கள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்ற வாசகத்துடன் அந்த படம் வெளியானது.

மாடல் ஒருவர், குழந்தைக்கு பாலூட்டுவது போன்ற அட்டைப் படத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்தன. அதே நேரத்தில் ஜிலு ஜோசப்புக்கு ஆதரவாகவும் சிலர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

பொது இடங்களில் தாய்ப்பால் கொடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தத்தான் இந்த படம் வெளியிடப்பட்டதாக கிருஹலட்சுமி இதழ் சார்பில் கூறப்பட்டது.

அட்டைப்படம் சர்ச்சை தொடர்பாக விளக்கம் அளித்த எழுத்தாளர் கிலு ஜோசஃப், தான் செய்தது சரிதான். இதற்கு எதிர்வினைகள் வரும் என்று தெரியும். சுதந்திரமாக தாய்ப்பால் கொடுக்க விரும்பும் பெண்களுக்காகவே நான் போஸ் கொடுத்தேன் என்று கூறியிருந்தார். 

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட புகைப்படம் பாலியல் உணர்வைத் தூண்டும் விதமாக உள்ளதாகவும், இதை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெலிக்ஸ் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், ஒவ்வொரு நபருக்கு பார்வை வித்தியாசப்படும். ஒருவருக்கு பாலியல் ரீதியாக தோன்றும் காட்சி, மற்றொருவருக்கு கலையாக தெரியும். ரவிவர்மாவின் ஓவியங்களைப் பார்ப்பது போன்றுதான் இந்த படத்தையும் பார்க்கிறோம் என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்தது.