ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்தின் டால்கம் பவுடரை பயன்படுத்தியதால், புற்றுநோய் பாதிக்கப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.2 ஆயிரத்து 629 கோடி நிவாரணம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

கலிபோர்னியாவைச் சேர்ந்தவர் இவா எச்சிவ்வெரியா(வயது 63). இவர் ஜான்சன்அன்ட் ஜன்சன் நிறுவனத்தின் பவுடரை பல ஆண்டுகளாக தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் இவருக்கு உடல்நிலையில் பாதிக்கப்பட்டு, மருத்துவப் பரிசோதனை செய்ததில் அந்த பெண் கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

மருத்தவர் அளித்த அறிக்கையிலும் ஜான்சன் அன்ட் ஜன்சன் பவுடரில் புற்றுநோயை உருவாக்கும் பொருட்கள் கலந்து இருப்பதை கண்டுபிடித்தனர். அதன் காரணமாக புற்றுநோய் வந்திருக்கலாம் என்று தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட இவா எச்சிவ்வெரியா இழப்பீடு கேட்டு ஜான்சன்அன்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு எதிராக லாஸ்ஏஞ்செல்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அதில் கூறியிருப்பதாவது-

ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் தனது டால்கம் பவுடரை பயன்படுத்தினால், புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதற்கான எச்சரிக்கை வாசகங்கள் எதையும், வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கவில்லை. அதனால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 41.7 கோடி டாலர்(ரூ.2,629 கோடி) இழப்பீடாக ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் அளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிடப்பட்டது.

ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படும், நாங்கள் அறிவியலை அடிப்படையாகக் கொண்டே செயல்படுகிறோம். எங்கள் பவுடரில்அந்தவகையான அபாயகரமாந பொருட்கள் இல்லை என்று ஜான்சன் அன்ட் ஜன்சன் நிறுவனத்தின் வழக்கறிஞர் தெரிவித்தார்.