2 பக்தைகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக தொடரப்பட்ட வழக்கில் தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என்று  சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததையடுத்து பஞ்சாப் ஹரியானா மாநிலங்களில் கலவரம் வெடித்துள்ளது. இதனால் கலவரத்தை கட்டுப்படுத்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உயரதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். 

கடந்த 2002 ஆம் ஆண்டு தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் ராம் ரஹீம் சிங் 2 பக்தைகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளனர். தீர்ப்பு சாமியாருக்கு எதிர்மறையாக வரும் எதிர்ப்பார்த்த நிலையில், மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் 144 தடை உத்தரவும் போடப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இன்று தீர்ப்பு வெளியானது. அதில், பாலியல் குறித்த வழக்கில் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். 

இதனால் ராம் ரஹீம் சிங் ஆதரவாளர்கள் தடை உத்தரவையும் மீறி உச்சகட்ட கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கையில் கிடைத்த பொருட்களையெல்லாம் கொளுத்தி வருகின்றனர். 

மேலும், கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸ் அதிகாரிகள் தவித்து வருகின்றனர். கண்ணீர்புகை குண்டு வீசி கூட்டத்தை விரட்ட முயற்ச்சித்து வருகின்றனர். 

இந்நிலையில், கலவரத்தை கட்டுப்படுத்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உயரதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றார்.