இந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டாக விளங்குகிறது என நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டொனால்டு டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு அகமதாபாத் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், டொனால்டு டிரம்பை பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றார். இதனையடுத்து சபர்மதி ஆசிரமத்திற்கு பிரதமர் மோடியுடன் சென்று பார்வையிட்ட டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா, அகமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தை திறந்து வைத்தனர். 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சிக்காக மைதானத்திற்குள் பிரதமர் மோடியும், டிரம்பும் வந்த போது மக்கள் ஆரவாரம் எழுப்பினர். பிறகு இரு நாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன. அரங்கம் நிறைந்த பார்வையாளர்களை பார்த்து மோடியும், டிரம்பையும் உற்சாகமாக கையசைத்தனர்.

நமஸ்தே எனக் கூறி தனது உரையைத் தொடங்கினர் டிரம்ப். தொடர்ந்து அவர் பேசியதாவது:- எனது உண்மையான நண்பர் மோடி. எங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்த நண்பர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன். இதுபோன்ற சாலை நெடுகிலுமான வரவேற்பை நான் எப்போதும் பார்த்ததில்லை. இந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டாக உள்ளது. டீ விற்பனையாளராக இருந்தவர் நாட்டின் தலைவராகியுள்ளார்.

இந்தியாவுக்காக பிரதமர் மோடி இரவு பகலாக உழைக்கிறார். இணையதள சேவை மற்றும் சமையல் எரிவாயு சேவையை இந்தியா முழுவதும் கொண்டு சேர்த்துள்ளார் மோடி. கடின உழைப்பால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணம் மோடி. மனித குலத்திற்கே நம்பிக்கை அளிக்கிறது இந்தியா. இந்தியாவின் நம்பிக்கைக்கு உரிய நட்பு நாடாக அமெரிக்கா திகழும். 10 ஆண்டுகளில் 27 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நிமிடமும் 7 இந்தியர்கள் வறுமையில் இருந்து மீள்கின்றனர் என தெரிவித்துள்ளார்.