குஜராத்தில் ரூ. 25 கோடி மதிப்பிலான வைர தாமரை மோதிரம் செய்து நகைக்கடை அதிபர்கள் கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த நகைக்கடை அதிபர்கள், நீர் பாதுகாப்பை முதன்மையாக கொண்டு 6,690 வைர கற்களை கொண்டு தாமரை வடிவ மோதிரத்தை செய்து சாதனை படைத்துள்ளனர்.

சூரத்தை சேர்ந்த நகைக்கடை அதிபர்கள் விஷால் அகர்வால் மற்றும் குஷ்பூ அகர்வால் இருவரும் சாதனை ஒன்றை படைக்க வேண்டும் குறிக்கோளாக இருந்தனர். தாங்கள் தொழில் செய்து வரும்  ஆபரண துறையிலேயே சாதிக்கலாம் என்று திட்டமிட்டனர். ஆபரண துறையில் செய்த சாதனைகளை புரட்டி பார்த்தனர். 

அந்த புத்தகத்தில் 18 கேரட் தங்கத்தை கொண்டு 48 வைர முலாம் பூசப்பட்ட ரோஸ் மோதிரமே, கின்னஸ் சாதனையாக இருந்துள்ளது. இதனை முறியடிக்க வேண்டும் என்று அவர்கள் தீர்மானித்தனர். இந்நிலையில் நாட்டின் முக்கிய பிரச்சனையாக நீர் இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தாமரை வடிவிலான வைர மோதிரத்தை உருவாக்க திட்டமிட்டனர். 6 மாத கடுமையாக உழைத்து 6,690 வைர கற்களை கொண்டு மோதிரத்தை உருவாக்கினர். 58 கிராம் அளவிற்கு இந்த மோதிரத்தின் எடை இருந்தது. இந்திய ரூபாய் மதிப்பில், இது ரூ. 28 கோடி மதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த மோதிரம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.