ஆதார் அட்டைக்காக தனிநபர்களின் அந்தரங்க விபரங்களை பெறுவது அடிப்படை உரிமை மீறலாகுமா? என்பது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

ஆதார் அட்டை உள்ளிட்ட அரசின் திட்டங்கள் தொடர்பாக தனிநபர்களின் அந்தரங்கம் பற்றிய தகவல்களை பெறுவது அடிப்படை உரிமை மீறல் ஆகுமா? என்று ஆய்வு செய்வதற்காக 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை உச்ச நீதிமன்றம் அமைத்து இருந்தது.

இந்த அமர்வில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ஆஜராகி மத்திய அரசின் நிலையை எடுத்து வைத்தார்.

அப்போது அவர், ‘‘தனி மனித சுதந்திரம் என்பது முழுமையான ஒன்றாக இருக்க முடியாது. அரசியல் சாசன சட்டப்பிரிவு 21-ன் படி எந்த ஒரு குடிமக்களும் அரசின் விசாரணைக்கு உட்பட்டவர்கள். எனவே தனி மனித சுதந்திரம் சட்டத்திற்கு உட்பட்ட ஒன்றுதான்’’ என்று வாதத்தை முன் வைத்திருந்தார்.

மேலும் பல்வேறு தரப்பினர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கருத்துகளையும், வாதப் பிரதிவாதங்களையும் இந்த அரசியல் சாசன அமர்வு ஆய்வு செய்தது.

இதுதொடர்பான விசாரணை முடிவடைந்த நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் நேற்று அறிவித்தது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மூன்றாவது பிரிவு ஒருவரைப் பற்றிய தனிப்பட்ட அந்தரங்கம் தொடர்பான தகவல்களை பகிரங்கப்படுத்துவதை தடைசெய்துள்ளது. இப்படிப்பட்ட விவகாரம் தனிநபர் உரிமை மீறலாகும் என இந்திய அரசியலமைப்பு சட்டம் தெளிவுப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த சட்டம் தொடர்பான ஒரு வழக்கில் கடந்த 1950-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டின் எட்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது. தனிநபரின் அந்தரங்கம் தொடர்பான சுதந்திரத்தில் தலையிடுவது அடிப்படை உரிமை மீறல் ஆகாது என எட்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு கருத்து தெரிவித்திருந்தது.

அதே வேளையில், மீண்டும் இவ்விவகாரம் தொடர்பாக 1960-ம் ஆண்டு வெளியான ஆறு நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு முந்தைய தீர்ப்புக்கு எதிர்மாறான கருத்தை வெளியிட்டிருந்தது.

இந்த தீர்ப்புகள் குறித்து அரசியல் சாசன அமர்வு ஆய்வு செய்து தீர்ப்பு வழங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.