தென் மாநிலத்தில் உள்ள ஆளுநர் ஒருவர் ஒருவரிடம், மத்திய விசாரணைக்குழு பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. பாலியல் குற்றச்சாட்டின்படி, ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் பெண்களுக்கு, ஆளுநர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஆளுநர் மீதான இந்த புகார் குறித்த விசாரணை, மத்திய ரகசிய புலனாய்வு துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரயின்போது குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் கண்டிப்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது. அதே வேளையில், பாலியல் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், பாஜக மற்றும் மத்திய அரசுக்கு பின்னடைவாக அமையும் என்று கருதப்படுகிறது. இதனால் அந்த ஆளுநர் பதவியை ராஜினாமா செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. 

மேகாலய மாநிலத்தின் ஆளுநர் சண்முகநாதன் மீது கடந்த ஆண்டு பாலியல் புகார்  கூறப்பட்டது. ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் பெண்கள், பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தனர். இது குறித்து அப்போதைய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. 

கடந்த 2009 ஆம் ஆண்டு, ஆந்திராவின் ஆளுநராக இருந்த என்.டி.திவாரி மீது பாலியல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அவர் ராஜினாமா செய்திருந்தார். 

இந்த நிலையில் தென்னிந்தியாவில் உட்ளள மாநில ஆளுநர்களில் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிகிறது என்று தனியார் செய்தி சேனல் ஒன்று வெளியிட்டுள்ளது.