பாலியல் பலாத்கார வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சாமியார் குர்மீத்ராம் ரஹீம் சிங் மீது மக்கள் கோபம் அதிகரித்து வருவதால் அவருடைய புகைப்படங்கள் குப்பையில் வீசி எறியப்பட்டு உள்ளன.

இரு பெண் துறவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ‘தேரா சச்சா சவுதா’ மத அமைப்பின் தலைவர் சாமியார் குர்மீத் சிங்கிற்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ. நீதிமன்றம தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

குர்மீத் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதும் அரியானா, பஞ்சாப், டெல்லி, மேற்கு உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. இதில் 37 பேர் பலியானார்கள், 350 பேர் காயமடைந்தனர்.

இப்போது சாமியாரின் ரகசியங்கள் ஒவ்வொன்றும் வெளிவந்த வண்ணம் உள்ளதால், அவரை கடவுளாக நினைத்து வழிபட்ட மக்கள் தவறு என உணர்ந்து அவருடைய புகைப்படங்களை குப்பையில் தூக்கி வீசி வருகிறார்கள்.

சாமியாரின் உண்மை முகம் தெரியவந்ததை தொடர்ந்து கடும் கோபம் கொண்டு உள்ள ஆதரவாளர்கள் அவர் சம்பந்தப்பட்ட பொருட்களை எல்லாம் குப்பையில் வீசி வருகிறார்கள்.

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகர் சுகாதார ஆய்வாளர் தேவேந்திர ரத்தோர், இந்த வாரம் ஆய்வு செய்ய சென்றபோது, இதுவரையில் கடவுள் என யாரை மக்கள் பின்தொடர்ந்தார்களோ அவரது புகைப்படத்தை குப்பையில் வீசிய காட்சியைக் கண்டு அதிர்ந்தார்.

இதுபற்றி குறிப்பிட்ட அவர், ‘‘குப்பையில் நூற்றுக்கணக்கான சாமியாரின் புகைப்படங்கள் வீசப்பட்டு உள்ளது. மீரா சவுக் மற்றும் சுகாதியா பகுதியில் புகைப்படங்கள் வீசியதில் வடிகாலில் நீர் செல்வதில் பெரும் இடையூறு ஏற்பட்டு உள்ளது’’ என கூறி உள்ளார்.

சாமியாரின் பிறந்த ஊரான குருசார் முந்தியா, ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில்தான் உள்ளது. மாவட்டம் முழுவதும் குப்பைகளில் சாமியாரின் புகைப்படங்களை காணமுடிகிறது என பணியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது