கடந்த ஓராண்டில் உத்தர பிரதேசத்தில் நடத்தப்பட்ட என்கவுண்டர்கள் குறித்து அம்மாநில அரசிடம் உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. 

உத்தர பிரதேசத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்துவருகிறது. யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்றதும், ரவுடிகளை ஒடுக்க அதிரடியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ரவுடிகளை ஒடுக்க தேவைக்கு ஏற்றவாறு என்கவுண்டர் செய்யலாம் என போலீஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

இதையடுத்து போலீஸார் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பல என்கவுண்டர்கள் செய்தனர். இதையடுத்து 2017 மார்ச் முதல் 2018 மார்ச் வரையிலான ஓராண்டு காலத்தில் உத்தரப் பிரதேசத்தில் நடத்தப்பட்ட என்கவுண்டர்கள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், இந்த ஓராண்டு காலத்தில் 1100 முறை போலீஸார் என்கவுண்டர் நடத்தியது தெரியவந்தது. இந்த என்கவுண்டர்களில் 49 உயிரிழந்ததும் 370 பேர் படுகாயமடைந்ததும் உறுதி செய்யப்பட்டது. 

இந்த என்கவுண்டர்களில் சுட்டு கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள் மற்றும் தலித்துகள் என காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி ஆகிய எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. 

உத்தர பிரதேச மாநிலத்தில் நடத்தப்பட்ட என்கவுண்டர்கள் சர்ச்சையை கிளப்பியதை அடுத்து இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கான்வில்கர் மற்றும் சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, உத்தர பிரதேசத்தில் நடத்தப்பட்ட என்கவுண்டர்கள் தொடர்பாக அம்மாநில அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டு, வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.