ராகுல் காந்திக்கு பி.ஜே.பி. தரும் பிரச்னைகள் பத்தாது என்று எக்ஸ்ட்ராவாக நாடெங்கிழும் பல நபர்கள் இம்சை அரசர்களாக வந்து சேருகின்றனர். அவர்களில் முக்கியமானவர்தான் ‘சரிதா நாயர்’. இவர் பஞ்சாயத்தால் பெரிய தலைவலி உருவாகி இருக்கிறது காங்கிரஸுக்கு. 

கேரளாவை சேர்ந்தவர் சரிதா நாயர். சோலார் பேனல் அமைத்து தரும் நிறுவனத்தை நடத்தி, பல கோடி ரூபாய் பணத்தை தன் கணவருடன் சேர்ந்து வசூல் பண்ணி, பலரை மோசடி செய்ததாக செம்ம வழக்கில் சிக்கியவர். இந்த புகாரிலிருந்து தன்னை காப்பாற்றி விடுவதாக சொல்லி கேரள அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் பலர் தன்னை கற்பழித்தனர்! என்று பெரும் பூகம்பத்தை சரிதா கிளப்ப, கேரள முதல்வராக இருந்த உம்மன் சாண்டியின் பர்ஷனல் செகரட்டரி வரை பலிகடாவானார்கள். 

சரிதா விவகாரத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட கமிஷனிடம் திடீரென ‘நான் அப்பாவாக பாவித்து வந்த கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியும் என்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தினார்’ என்று ஒரு பட்டாசை பற்றவைத்தார். பெரும் பரபரப்பை கிளப்பியது இந்த விவகாரம். காங்கிரஸ் முதல்வர்களிலேயே ‘மிஸ்டர் க்ளீன்’ என்று பட்டம் பெற்ற உம்மன் மீதான இந்த புகாரை யாராலும் ஜீரணிக்க முடியவில்லை. இந்த புகாரை தொட்டு உம்மன் மீது கடும் நடவடிக்கையை ராகுல் எடுப்பார் என்று சரிதா நினைத்தார். ஆனால் அது நடக்கவில்லை. 

இந்நிலையில் இந்த நாடாளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் களமிறங்கினார் ராகுல். தனக்கு நியாயம் தராத ராகுலை தோற்கடிப்பேன்! என்று சொல்லி அங்கே அவரை எதித்து சுயேட்சையாக களமிறங்கினார் சரிதா. ஆனால் இவர் மீதான குற்ற வழக்குகளை காரணம் காட்டி, வேட்பு மனுவை நிராகரித்தனர். 

இந்நிலையில் அமேதி தொகுதியில் போட்டியிடும் ராகுலை எதித்து அங்கும் களமிறங்கியிருக்கிறார் சரிதா. அங்கே அவரது மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு, மிளகாய் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ’இங்கே நான் வெல்கிறேனோ இல்லையோ. ஆனால் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களின் பாலியல் அசிங்க முகத்தை என் பிரசாரத்தில் கிழித்தெடுப்பேன். அவர்களை தட்டிக் கேட்க துணிவில்லாத ராகுலையும் துவைத்தெடுப்பேன்.’ என்று சபதமெடுத்துள்ளார். 

பி.ஜே.பி.யின் தூண்டுதலால்தான் சரிதா இப்படி ராகுலை விரட்டுகிறார் என்று நினைக்கிறது காங்கிரஸ். ஆனால் பி.ஜே.பி.யோ....ராகுல் மீது உ.பி.யில் கூட்டு பலாத்கார வழக்கு ஒன்று பதிவாகி பின் தள்ளுபடியானது, இப்போது அவர் கட்சியின் முக்கிய புள்ளியால் பாலியல் ரீதியில் பாதிக்கப்பட்ட பெண்ணால் ராகுலின் வெற்றிக்கு சிக்கலாகி இருக்கிறது, எப்படியோ ராகுலை ‘செக்ஸ் சாபம்’ துரத்துகிறது! என்று கதகதப்பாக கொளுத்திப் போட்டுள்ளனர்.