உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பழம் பெரும் மசூதி முன்பாக இந்து கடவுளான ராமரின் தம்பி லட்சுமணன் சிலையை அமைக்க அம்மாநில பாஜக அரசு எடுத்த முடிவு  அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. லக்னோவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தீலிவாலி மசூதி, சுமார் 350 ஆண்டுகள் பழமையானது. இந்த மசூதியின் எதிரே உள்ள நிலத்தில் லட்சுமணனின் சிலையை நிறுவுவதற்கான திட்டத்தை, கடந்த ஜூலை 27ஆம் தேதி லக்னோ மாநகராட்சியிடம் பாஜக எம்.எல்.ஏ.க்கள் ராமகிருஷ்ண யாதவ் மற்றும் ரஜ்னீஷ் குப்தா ஆகியோர் வழங்கினர்.

லக்னோவில் லட்சுமணன் சிலை அமைக்க விரைவில் உத்தரப்பிரதேச சட்டப்பேரவையிலும் அனுமதி பெறப்படும் என அவர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில், பாஜக அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இஸ்லாமிய அமைப்புகள், லட்சுமணன் சிலை நிறுவப்பட்டால் தொழுகை செய்வதில் தடை ஏற்படும் என தெரிவித்தனர்.

இஸ்லாத்தில் சிலைக்கு முன் வழிபாடு நடத்தும் முறை இல்லை என அவர்கள் கூறியுள்ளனர். இதனிடையே, லக்னோ நகரை உருவாக்கியதில் லட்சுமணனுக்கு இருந்த மாபெரும் பங்கை நினைவுகூறும் வகையிலேயே, அவரது சிலையை நிறுவ முடிவு செய்துள்ளதாக பா.ஜ.க விளக்கம் அளித்துள்ளது. மேலும், லக்னோவை லட்சுமணபுரி என பெயர் மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனை ஏற்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விரைவில் அங்கு லட்சுமணன் சிலையை அமைக்க அனுமதி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உத்தரிபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் புதிய முடிவால் அம்மாநிலத்தில் சர்ச்சை கிளம்பியுள்ளது.