நம் நாட்டில் ஜனநாயக விரோத ஆட்சி நடைபெறுகிறது. அதில் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும், என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். உடல்நலம் காரணமாக, காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக, அவரது மகன் ராகுல், கட்சித் தலைவராக பதவியேற்றார். தற்சமயம், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராக சோனியா செயல்பட்டு வருகிறார்.

 அவரின் முழு முயற்சியில் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. எனினும், பெரும்பான்மை ஆதரவு இல்லாததால் தீர்மானம் தோல்வி கண்டது. இந்த தீர்மானத்தை நிறைவேற்றியபோது, நாடாளுமன்ற மக்களவையில், ராகுல் காந்தி, பிரதமர் மோடியை காரசாரமாக விமர்சித்தார். அப்போது அவர் பேசிய பேச்சும், அதற்கும் பிரதமர் மோடி காட்டிய ரியாக்சனும் பெரும் வைரலாகின. காட்டமாகப் பேசினாலும், பேச்சு முடிந்ததும் பிரதமர் மோடியின் இருக்கைக்கு வந்து ராகுல் காந்தி கட்டித்தழுவினார். இது பாஜக தலைவர்களை அதிர்ச்சியடைய செய்தது. 

இதுபற்றி கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, விஷ ஊசி போட்டு பிரதமரை கொல்ல முயற்சி நடைபெறுகிறது. எனவே, ராகுல் கட்டிப்பிடித்தது சந்தேகம் தருகிறது, என்றார். ஆனால், இது வீண் குற்றச்சாட்டு என்று காங்கிரஸ் கட்சி தரப்பில் பதிலடி தரப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில், காங்கிரஸ் கட்சியில் புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள செயற்குழு கூட்டம் நடைபெற்றது. ராகுல் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சோனியா பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது: நம் நாட்டில் தற்போது மிகவும் மோசமான, மக்கள் விரோத ஆட்சி நடைபெறுகிறது. 

ஜனநாயகம் என்ற பெயரில் அவர்கள் நாட்டை கேலிக்கூத்தாக்கி வருகின்றனர். பின்தங்கிய மற்றும் வறுமையில் வாடும் மக்கள் இந்த ஆட்சியின் மீது நம்பிக்கை இழந்துள்ளதோடு, மிகவும் பயம்கொண்டுள்ளனர். அவர்களை பாதுகாக்க வேண்டிய கடமை நமக்குள்ளது. இதன்படி, காங்கிரஸ் தலைவர் ராகுல் தலைமையில் நாம் பலம்வாய்ந்த கூட்டணி ஏற்படுத்த வேண்டியுள்ளது. இதனை வெற்றிகரமாகச் செய்தால் மட்டுமே இந்த ஆட்சியை நம்மால் அகற்ற முடியும். இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.