திடீர் பணத்தட்டுப்பாட்டை போக்க கூடுதலாக 500 ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க ரிசர்வி வங்கி முடிவு செய்துள்ளது.

குஜராத், பீகார், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மராட்டியம், தெலுங்கானா, டெல்லி உள்படப் பல மாநிலங்களிலும், தமிகத்தில் சில பகுதிகளிலும் ஏடிஎம் மையங்களில் பணம் இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் மத்திய அரசு கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

ஏடிஎம் களில் பணம் இல்லாததால் பொது மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். 2016 நவம்பர்8 ஆம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ஏற்பட்ட சூழல் தற்போது மீண்டும் ஏற்பட்டுள்ளதோ என்ற அச்சம் பொது மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

ஏடிஎம்களில் பணம் இல்லாமல் சென்றது தொடர்பாக நிதிமந்திரி அருண் ஜெட்லி தனது டுவிட்டர் பக்கத்தில் ,  செயற்கையாக உருவாகி உள்ள இந்த பணத்தட்டுப்பாடு அடுத்த சில நாட்களில் தீர்க்கப்படும்,  தேவைக்கு அதிகமான அளவு பணம் இருக்கிறது என குறிப்பிட்டு உள்ளார். இந்நிலையில் பணத்தட்டுப்பாட்டை தவிர்க்க கூடுதலாக 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு செய்து உள்ளது.

இந்நிலையில் இனிவரும் நாட்களில் ரூ. 500 நோட்டு, ஒரு நாளைக்கு 5 மடங்காக, ரூ.2500 கோடிக்கு அச்சிடப்படும் என பொருளாதார விவகாரத்துறை செயலர் எஸ் சி கார்க் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார். 

நாடு முழுவதும் ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால்  இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும்,  500 ரூபாய் நோட்டுக்கள் அதிகமாக அச்சடிப்பதன் மூலம் மாத சப்ளை 70,000-75,000 கோடியாக இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.