மத நம்பிக்கை என்ற பெயரில் கட்டவிழ்த்து விடப்படும் எந்த விதமான வன்முறைச் சம்பவங்களையும் பொறுத்துக் கொள்ள மாட்டோம். தவறு செய்தவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்தார்.

பாலியல் பலாத்கார வழக்கில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரும், சாமியாருமான குர்மீத்சிங் குற்றவாளி என சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதைத் தொடர்ந்து அவரின் ஆதரவாளர்கள் அரியானா, பஞ்சாபில் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் 32பேர் கொல்லப்பட்டனர். 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதைக் மறைமுகமாகவே குறிப்பிட்டு பிரதமர் மோடி மன் கி பாத் ரேடியோ நிகழ்ச்சியில் பேசினார்.

ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் (மனதில் இருந்து பேசுகிறேன்) ‘மன் கிபாத்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் வனொலி மூலமாக மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுவார். அதன்படி, நேற்றைய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது-

புத்தரும், மகாத்மா காந்தியும் பிறந்த, வளர்ந்த நாடு. சர்தார் வல்லபாய் படேல் அனைவரையும் ஒன்றாக இணைத்து உருவாக்கிய நாடு. நூற்றாண்டுகளாக நமது முன்னோர்கள் சமூகத்தின் மதிப்புகளை புரிந்து கொண்டு வாழ்ந்தனர், வன்முறை இல்லாமல், பரஸ்பர மரியாதை செலுத்தி, உள்ளார்ந்த மதிப்புடன் வாழ்ந்தனர். அஹிம்சை என்பது மிகப்பெரிய மதம்.

சுதந்திரதின விழாவின்போது நான் செங்கோட்டையில் பேசுகையில் ஒன்றை குறிப்பிட்டதை கூற விரும்புகிறேன். மத நம்பிக்கையின் பெயரில் நடக்கும் வன்முறையை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளமாட்டோம். அது சமூகநம்பிக்கை சார்ந்ததாக இருந்தாலும் சரி, அரசியல் சித்தாந்த விஷயங்களாக இருந்தாலும் சரி, அல்லது ஒரு தனிமனிதருக்காக விசுவாசம் காட்டி செய்யப்படும் பழக்கங்களாக இருந்தாலும் சரி அதில் வன்முறை நிகழ்ந்தால் சகிக்க மாட்டோம்.

என் நாட்டு மக்களுக்கு நான் சொல்வது என்னவென்றால், சட்டத்தை கையில் எடுப்பவர்கள்?, வன்முறை பாதையில் செல்பவர்கள் நிச்சயமாக அடக்கப்படுவார்கள் என்று உறுதிளிக்கிறேன். அவர்கள் தப்பிக்க முடியாது.

 தனி நபரோ, குழுவோ வன்முறையில் ஈடுபட்டால் இந்த நாடோ அல்லது என் அரசோ அதைப் பார்த்துக்கொண்டு பொறுமையாக இருக்காது.

ஒவ்வொருவரும் சட்டத்தின் முன் அடிபணிய வேண்டும். சட்டம் நம்பகத்தன்மையுடன் செயல்பட்டு, தவறு இழைத்தவர்கள் மீது கேள்வி கேட்காமல் தண்டனை வழங்கும். நமது அரசியலமைப்புச் சட்டத்தை தயாரித்த பி.ஆர். அம்பேத்கர் மக்களின் அனைத்து வகையான குறைகளுக்கும் தீர்வு காணும் வகையிலும், நீதி கிடைக்கும் வகையிலும் அமைத்துள்ளார்.

அதேசமயம், நமது நாட்டு மக்கள் இப்போது, பண்டிகை காலத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. அப்படி இருக்கும் சூழலில் நாட்டின் ஏதாவது ஒருபகுதியில் இருந்து வன்முறை சம்பவங்கள் குறித்த செய்தி வந்தால், அது இயல்பாகவே கவலை அளிப்பதாக இருக்கிறது. .

இவ்வாறு அவர் தெரிவித்தார்.