சிக்கிம் மாநிலம் டோக்லாமில் சீனாவுடன் ஏற்பட்டிருக்கும் எல்லை மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

சிக்கிம் மாநில எல்லையில் டோக்லாம் பகுதி உள்ளது. இந்த பகுதி தனக்கு சொந்தமானது என்று கூறி, சீன ராணுவம் அங்கு சாலை அமைக்க தொடங்கியது. இதனை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து, எல்லையில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். நீண்ட காலத்திற்கு படையை நிறுத்தும் வகையில் அங்கு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் சீனா தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. தங்களது இறையாண்மையை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று சீன ஆட்சியாளர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தோ – திபெத் பாதுகாப்பு படையின் நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:- டோக்லாமில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதற்கு வெகு விரைவில் தீர்வு ஏற்படும் என்று நம்புகிறேன். ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை சீனா மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கிறேன்.

இந்தியாவுக்கு அண்டை நாடுகளை ஆக்கிரமிக்கும் எண்ணம் ஒருபோதும் கிடையாது. இது உலக நாடுகளுக்கு நன்றாகத் தெரியும். நாம் நம்முடைய ஆனால் நம்முடைய எல்லைகளை பாதுகாக்கக் கூடிய வலிமை நம் பாதுகாப்பு படைகளுக்கு உண்டு. 2014-ல் மத்தியில் பாஜக அரசு அமைந்தது. அப்போது பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்குமாறு அண்டை நாடுகளை அழைத்தோம். அவர்களுடன் நல்லுறவை மேம்படுத்த இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த தருணத்தில் நம் அண்டை நாடுகளுக்கு ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறேன். ‘நாங்கள் போரை விரும்பவில்லை; அமைதிதான் எங்களது விருப்பம்.’ இவ்வாறு அவர் பேசினார்.