மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. முதல் ஆளாக களத்தில் குதித்துள்ள கேரள மாநில காங்கிரஸ் கட்சியினர் இன்றைய தினத்தை கருப்பு நாளாக அனுசரித்து வருகின்றனர். 

இதற்கிடையே போராட்டத்தின் போது இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் நட்டநடு சாலையில் கன்றுக் குட்டியை வெட்டி சமைத்து சாப்பிட்டனர். இளைஞர் காங்கிரஸ் கட்சியினரின் இச்செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், ராகுல்காந்தியும் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி,  கேரளாவில் நடைபெற்றது முட்டாள்தனமானது, காட்டுமிராண்டித்தனமான இந்த செயல் என்னாலும் காங்கிரஸ் கட்சியாலும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். இந்த சம்பவத்திற்கு நான் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்” என்று தெரிவித்தார். இதே போல கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இளைஞர் காங்கிரஸூக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இத்தகைய முட்டாள்தனமான செயல் சங் பரிவார் இயக்கங்களுக்கு சாதகமாகவே அமையும் என்றும், விளம்பரத்திற்காக செய்யப்பட்ட இது போன்ற கீழ்த்தரமான செயலை உடனடியாக  நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.