அனைத்து பொதுத்துறை வங்கிகளும் இந்த நிதியாண்டின் முதல் 3 காலாண்டுகளில் நிகர லாபமாக ரூ.507 கோடி  ஈட்டியுள்ளன என மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் சிங் தாகூர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக பொதுத்துறை வங்கிகள் தொடர் நஷ்டத்தில் இயங்கி வந்தன. வாராக் கடன் சுமையால் வங்கிகள் தள்ளாடின. இந்நிலையில் வாராக் கடனை குறைக்க மத்திய அரசும், பொதுத்துறை வங்கிகளும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதற்கு தற்போது பலன் கிடைக்க தொடங்கியுள்ளது. இந்த நிதியாண்டில் கடந்த டிசம்பர் வரையிலான 3 காலாண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் லாபம் ஈட்டியுள்ளன.

நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் சிங் தாகூர் பதிலளிக்கையில் கூறியதாவது: அனைத்து பொதுத்துறை வங்கிகளும் இந்த நிதியாண்டின் முதல் 3 காலாண்டுகளில் ரூ.507 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளன. கடந்த 2 நிதியாண்டுகளில் பொதுத்துறை வங்கிகளுக்கு முறையே ரூ.85,370 கோடி மற்றும் ரூ.80,084 கோடியை நிகர நஷ்டம் ஏற்பட்டது. அந்த ஆண்டுகளில் வங்கிகள் செயல்பாட்டு லாபமாக ரூ.1.5 லட்சம் கோடிக்கும் மேல் ஈட்டியபோதும், ஒதுக்கீடு அதிகமாக செய்ததால் நஷ்டம் ஏற்பட்டது.

இந்நிலையில் வங்கிகளின் வாராக் கடன் சுமையை குறைக்க, அங்கீகாரம், தீர்மானம், மறுமூலதனமாக்கல் மற்றும் சீர்திருத்தங்கள் என்ற 4 R திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது. இதன் பலனாக 31.3.2018ல் ரூ.8.95 லட்சம் கோடியாக இருந்த வாராக் கடன், 31.3.2019ல் ரூ.7.89 லட்சம் கோடியாக குறைந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆக, 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்த நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகள் மீண்டும் லாப பாதைக்கு திரும்பிவிடும் என நாம் எதிர்பார்க்கலாம்.