நீண்ட காலமாக ஒரு ஆணும் பெண்ணும் செக்ஸ் உறவில் இருந்தால் அவர்களுக்கு இடையிலான உறவை திருமணமாக அங்கீகரிக்கலாமா? என்று மத்திய அரசை உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.    மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் தனது ஆண் நண்பர் தன்னுடன் பல ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தியதாகவும், திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினால் அவர் மறுப்பதாகவும் எனவே அவர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அந்த பெண்ணின் விருப்பத்துடன் தான் உடலுறவு கொண்டதாகவும், தான் கற்பழிக்கவில்லை என்றும் அந்த ஆண் பதில் மனு தாக்கல் செய்தார். மேலும் தான் அவரை திருமணம் செய்து கொள்வதாக வாக்கு கொடுக்கவில்லை என்றும் கூறினார்.இந்த மனு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், ஆண்  - பெண் திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் போக்கு இந்தியாவில் அதிகரித்து வருவதாக கூறினர். மேலும் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஆண்கள் பெண்களை தங்களது இச்சைக்கு பயன்படுத்திவிட்டு திருமணம் என்றால் தப்பிவிடும் போக்கும் இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த நிலையை மாற்ற உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருதுவதாகவும் நீதிபதிகள் கூறினர்.

எனவே லிவிங் டுகெதர் வாழ்க்கை முறையில் பெண்கள் ஏமாற்றப்படுவதை தடுக்க நடவடிக்கை அவசியம் என்று கூறிய நீதிபதிகள் யோசனை ஒன்றையும் முன்வைத்தனர். அதாவது நீண்ட காலமாக ஒரு ஆண் – பெண் இடையே செக்ஸ் உறவு இருப்பது தெரியவந்தால் அவர்கள் உறவை திருமணமாக அங்கீகரிக்கலாமா? என்று கேள்வி எழுப்பினர். மேலும் நீண்ட காலமாக செக்ஸ் உறவில் இருக்கும் ஆண் – பெண் இடையிலான உறவை திருமணமாக அங்கீகரிப்பதில் சட்ட சிக்கல் ஏதும் உள்ளதா? என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  இந்த கேள்விகளுக்கு மத்திய அரசு செப்டம்பர் 12ந் தேதிக்குள் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிபதிகளின் யோசனையை ஏற்று நீண்ட கால செக்ஸ் உறவை திருமணமாக அங்கீகரிக்க மத்திய அரசு முடிவெடுக்கும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவே கூறப்படுகிறது. அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டால் இந்தியாவில் லிவிங்டுகெதர் வாழ்க்கை முறை திருமணமாக சட்ட அங்கீகாரம் பெறும் நிலை உருவாகும்.