Asianet News TamilAsianet News Tamil

சாமியார் ஆசராம் பாபுக்கும் ஆப்பு ரெடியாகிறது...! குஜராத் அரசு மீது சாட்டையை சுழற்றியது உச்சநீதிமன்றம்

Problem for Samiyar Asaram Babu
Problem for Samiyar Asaram Babu
Author
First Published Aug 28, 2017, 4:20 PM IST


சாமியார் ஆசராம் பாபு மீதான பாலியல் பலாத்கார வழக்கின் விசாரணையை ஏன் மெதுவாக நடத்துகிறீர்கள்?, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ஏன் இன்னும் வாக்குமூலம் பெறவில்லை என்று குஜராத் மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று கேள்வி எழுப்பியுள்ளது.

தன்னைத்தானே கடவுள் எனக் கூறிக்கொண்டு, ராஜஸ்தான் மாநிலத்தில் ஆசிரமம் நடத்தி வருபவர் சாமியார் ஆசாராம் பாபு(வயது75). குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்த  இரு சகோதரிகள் சாமியார் ஆசராம் பாபு, அவரின் மகன் நாராயன் சாய் ஆகியோர் மீது தனித்தனியாக பாலியல் புகார்கள் அளித்தனர்.

இதில், கடந்த 2001 மற்றும் 2006-க்கு இடைப்பட்ட காலங்களில் ஆமதாபாத் ஆசிரமம் அருகே தங்கி இருந்தபோது, பல முறை பலாத்காரம் செய்யப்பட்டதாக புகாரில் அந்த பெண்கள் தெரிவித்து இருந்தனர். இது தொடர்பான வழக்கு சூரத் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதற்கிடையே ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் மனாய் கிராமத்தில் உள்ள  ஆசிரமத்தில் ஆசாராம் பாபு, தன்னை பாலியல் பலாத்காரம் செய்தததாக 16 வயது சிறுமி ஒருவர் புகார் தெரிவித்து இருந்தார். பாதிக்கப்பட்ட  பெண், உத்தரப்பிரதேசம், சாஜஹான்பூரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார் ஆசாராம் பாபுவை கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்தனர். தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவரை ஜாமினில் விடுவிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

 இதற்கிடையில், தனது உடல் நிலையை காரணம் காட்டி சிகிச்சை பெறுவதற்காக தன்னை ஜாமினில் விடுவிக்க வேண்டும் என ஆசாராம் பாபு உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மருத்துவ ஆவணங்கள் போலியானவை என்பதை கண்டுபிடித்த  உச்ச நீதிமன்றம், கடந்த ஜனவரி மாதம் 30-ம் தேதி அவரது மனுவை தள்ளுபடி செய்து அறிவித்தது.

இதற்கிடையே சாமியார் ஆசராம் பாபு மீதான வழக்கின் விசாரணையை வேகப்படுத்தக் கூறி தொடரப்பட்ட மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்.வி. ரமணா மற்றும் அமித்தவ ராய் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் குஜராத் மாநில அரசை கடுமையாக கண்டித்துப் பேசினர். தங்கள் உத்தரவில் அவர்கள் கூறியதாவது-

சூரத் நகரை சேர்ந்த இரு பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அவர்களிடமும்  46 சாட்சிகளிடம் சூரத் விசாரணை நீதிமன்றம் வாக்குமூலம் ஏன் பதிவு செய்யவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் இதுவரை வாக்குமூலம் பெறாதது ஏன்?.

எதற்காக விசாரணயை இந்த அளவுக்கு மெதுவாக நகர்த்துகிறீர்கள் என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். வழக்கின் விசாரணையை துரிதமாக நடத்தி, அது குறித்த அறிக்கையை மாநில அரசு நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அரியானாவில் பலாத்தார வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அடுத்ததாக, சாமியார் ஆசராம் பாபு மீதான வழக்கையும் விரைவாக நடத்த உச்ச நீதிமன்றம் சாட்டையை சுழற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios