மாணவிகள் வெள்ளை நிறம் அல்லது ஸ்கின் நிறத்தில் மட்டுமே உள்ளாடை அணிய வேண்டும் என பிரபல தனியார் பள்ளி உத்தரவிட்டுள்ள சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரத்தில் விஸ்வசாந்தி குருகுல் என்ற பிரபல தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி நிர்வாகம், தங்கள்  மாணவிகள் தாங்கள் கூறும் நிறத்தில் தான் பிரா உள்ளிட்ட உள்ளாடைகளை அணிய வேண்டும் என்று கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அதாவது, மாணவிகள் அனைவரும் வெள்ளை அல்லது ஸ்கின் நிற உள்ளாடைகளை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்று விஸ்வசாந்தி குருகுல் பள்ளியின் நடப்பு கல்வியாண்டுக்கான டைரியில், திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   வெள்ளை அல்லது ஸ்கின் நிற பிராவை தவிர்த்து வேறு வண்ணங்களில் உள்ளாடைகள் அணிந்து வந்தால் அது உடையோடு ஒன்றாமல், பிறர் கண்ணுக்கு உறுத்தலாக தெரியும் என்றும் பள்ளியின் டைரியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது போன்று உள்ளாடை தெரியும் வகையில் ஆடை அணிவதால் மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.மாணவிகள் வெண்மை மற்றும் ஸ்கின் நிற பிரா மட்டுமே அணிந்து பள்ளிக்கு வருவார்கள் என்று டைரியில் பெற்றோர் கையெழுத்திட வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் வற்புறுத்துவதாகவும், இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பிள்ளைகளை பள்ளியில் இருந்து நீக்கிவிடுவோம் என மிரட்டுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.    பெற்றோர்களின் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள விஸ்வசாந்தி குருகுல் பள்ளி நிர்வாகம், மாணவிகளின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டே  அவர்களை வெண்மை நிறம் அல்லது ஸ்கின் நிறத்தில் உள்ளாடைகள் அணியச் சொல்வதாக விளக்கம் அளித்துள்ளது.  

ஆனால் இதனை ஏற்க மறுத்த மாணவிகளின் பெற்றோர் பலர், விஸ்வசாந்தி குருகுல் பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும், பள்ளி நிர்வாகம் அதை கண்டுகொள்ளவில்லை. வெள்ளை நிற பிரா மட்டுமே அணிந்து வர வேண்டும் என்கிற தங்கள் உத்தரவில் மாற்றம் இல்லை என்று தெரிவித்துவிட்டது.