ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கிய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370, 35ஏ ஆகியவற்றை மத்திய அரசு ரத்து செய்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு - காஷ்மீரை சட்டப்பேரவை கொண்ட யூனியன் பிரதேசமாகவும் லடாக்கை சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் இரண்டாக பிரித்தது. 

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திலும் பொதுவெளியிலும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது ஜனநாயக படுகொலை எனவும், அரசியலமைப்பு பிரிவு 370 நீக்கப்பட்ட நாள் கறுப்பு நாள் என்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் முழங்கினர்.

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, முதன்முறையாக இன்று பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, காஷ்மீரின் வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்தும் காஷ்மீர் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையிலும் பேசினார்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய திரையுலகினரின் ஆஸ்தான படப்பிடிப்பு தளமாக காஷ்மீர் திகழ்கிறது. இவர்கள் அங்கு படப்பிடிப்பு நடத்துவதால் காஷ்மீர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. வருங்காலத்தில் ஹாலிவுட் படங்கள் கூட காஷ்மீரில் எடுக்கப்படும். 

காஷ்மீர் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும். காஷ்மீர் மக்களின் வருவாய் பற்றாக்குறை பெரும் கவலையாக உருவெடுத்துள்ளது. வருவாயை அதிகரிக்க திட்டங்கள் செயல்படுத்தப்படும். மத்திய அரசு எடுக்கும் முடிவுகளால் ஜம்மு காஷ்மீர் மக்கள் கலக்கமடைய தேவையில்லை. 

காஷ்மீர் மக்கள் பயங்கரவாதத்தை தோற்கடித்து விரைவில் வளர்ச்சி பாதையில் செல்வார்கள். காஷ்மீர் மக்களின் உரிமை நிலைநாட்டப்படும். காஷ்மீர் இயற்கையின் உறைவிடமாக இருப்பதால் சூழல் சுற்றுலா மேம்படும். ஆன்மீக மற்றும் சாகச சுற்றுலாத்தளங்களும் உருவெடுக்கும். காஷ்மீர் மக்களுக்கு புதிய வழி பிறந்துள்ளது. அதில் நீங்கள் தைரியமாக பயணிக்கலாம் என்று பிரதமர் மோடி பேசினார்.