பாஸ்போர்ட் பெறும் போது, விண்ணப்பத்தவர்களை நேரடியாக போலீசார் சென்று விசாரணை செய்யும் முறை நீக்கப்பட்டு, ஆன்-லைன் மூலமே போலீஸ் விசாரணை நடத்தி பாஸ்போர்ட் வழங்கும் முறை அடுத்த ஓர் ஆண்டில் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ள போலீசாருக்கான டிஜிட்டல் இணையதளான ‘கிரைம் மற்றும் கிரிமினல் டிராக்கிங் போர்ட்டல்’(சி.சி.டி.என்.எஸ்.) மூலம் இந்த திட்டம்  செயல்படுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

தாமதம்

கடந்த 2009ம் ஆண்டு ஆன்-லைன் மூலம் நாட்டில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களை இணைக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டு விட்டபோதிலும், இப்போதுதான் நடைமுறைக்கு வந்துள்ளது.

15 ஆயிரம் போலீஸ் நிலையங்கள்

இதன் மூலம் நாட்டில் உள்ள 15 ஆயிரத்து 398 போலீஸ் நிலையங்கள் ஆன்-லைன்மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வலைதளத்தை  பயன்படுத்தி பொதுமக்கள் புகார்களை, கோரிக்கை மனுக்களையும் அளிக்கலாம், அதன் நிலை குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.

மேலும், தேசிய டிஜிட்டல் போலீஸ் போர்ட்டல் மூலம், நாட்டில் பல்வேறு போலீஸ் நிலையங்கள் இணைக்கப்பட்டு இருப்பதால், மத்திய புலானாய்வு அமைப்புகள், விசாரணை ஆய்வு அமைப்புகள், தங்களுக்கு உரிய பிரத்யேக பாஸ்வேர்டு மூலம், அனைத்து மாநில குற்ற விவரங்களையும், அதன்நிலைகளையும் அறிய முடியும்.

ராஜ்நாத் சிங் தொடக்கம் 

இந்த இணையதளத்தை திங்கள்கிழமை தொடங்கி வைத்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டுவிட்டரில் விடுத்த பதிவில், “ இந்த போலீஸ் துறைக்கான இணையதளம் மூலம், மக்கள் ஆன்-லைன் மூலம் புகாரை பதிவு செய்யலாம், அரசு பணிக்கு தேர்வான ஒருவர் குறித்து விசாரணை நடத்தலாம். இந்த திட்டம் பிரதமர் மோடியின் கனவாக, குறைபந்த பட்சம் அரசு, அதிகபட்ச நிர்வாகம் என்பதை நனவாக்கும்’’ எனத் தெரிவித்தார்.

ஆன்-லைன் மூலம் புகார்

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், “ போலீசாருக்கான இந்த டிஜிட்டல் இணையதளம் மூலம், குற்ற விசாரணையையும் ,குற்றவாளிகளையும் கண்காணிக்கலாம், பொதுமக்கள் ஆன்-லைன் மூலம் புகார் அளிக்கலாம், அரசுப் பணிக்கு தேர்வானவர்களை ஆன்-லைன் மூலம் விசாரணை செய்து அறிக்கை அளிக்கலாம். அடுத்த இரு மாதங்களுக்குள் நீதிமன்றம், சிறை குறித்த இணைதளங்களும் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளது’’ எனத் தெரிவித்தார்.

பாஸ்போர்ட் விசாரணை

மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் ராஜீவ் மெகரிஷி கூறுகையில், “ போலீஸாருக்கான இந்த டிஜிட்டல் இணையதளம் பாஸ்போர்ட் சேவையுடன் இணைக்கப்படும். அடுத்த ஓர் ஆண்டுக்குள் பாஸ்போர்ட்டுக்கான போலீஸ் விசாரணையும் ஆன்-லைன் மூலமாகவே நடத்தப்படும். இந்த விசாரணை போலீஸ் இணையதளத்தின் குற்றவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும். இதன் போலீசாரின் நேரம் மற்றும் பாஸ்போர்ட் விண்ணப்பித்தவரை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பும் குறையும்’’ என்றார்.