பாகிஸ்தானில் இருந்து விடுவிக்கப்பட்ட அபிநந்தன் இந்திய மக்கள் மனதில் ஹீரோவாக பதியம்போட்டிருக்கிறார் என்பதற்கு சான்றாக தங்களது குழந்தைகளுக்கு அபிநந்தன் என்கிற பெயரை சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள் இரு பெற்றோர். 

உத்தரப்பிரதேச மாநிலம் நிஹல்பூரைச் சேர்ந்தவர் வயதான விம்லேஷ் பெந்தாரா. இவர் கடந்த சில நாட்களாக அபிநந்தன் குறித்த செய்திகளை தொலைக்காட்சியில் பார்த்து வந்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் இடையே நீடித்து வந்த பதற்றத்திற்கு அபிநந்தனும் ஒரு முக்கிய காரணம். இந்நிலையில் கர்ப்பிணியான விம்லேஷ், பிரசவ வலி ஏற்பட்டு கடந்த வியாழன் மாலை ஜெய்ப்பூரில் உள்ள மகிளா சிகித்சாலயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இதைத் தொடர்ந்து வெள்ளி மாலை 3.30 மணியளவில் அறுவை சிகிச்சை மூலம் அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் தனது கணவர், குடும்பத்தாருடன் கலந்து ஆலோசித்து பிறந்த குழந்தைக்கு ‘அபிநந்தன்’ என்று பெயரிட்டுள்ளனர். இதேபோல் நீலம் திக்கிவால், அவரது கணவர் ரவி திக்கிவால் மற்றும் சில குடும்பத்தினரும் தங்கள் குழந்தைகளுக்கு ‘அபிநந்தன்’ பெயரை சூட்டியுள்ளனர். 

இதுகுறித்து பேசிய விம்லேஷ், தனக்கு குழந்தை பிறக்கும் முன்பாகவே ஒருவேளை மகன் பிறந்தால், ‘அபிநந்தன்’ என்ற பெயரை சூட்ட வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். ‘அபிநந்தன்’ திரும்பி வந்ததையும், எனக்கு மகன் பிறந்ததையும் என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். உண்மையான ‘அபிநந்தன்’ போன்று, எனது மகனும் நல்ல பெயரை பெற்றுத் தருவான் என்று நம்புகிறேன் என்று கூறினார். 

இதேபோன்ற சிந்தனையில் சங்கனேரைச் சேர்ந்த திக்கிவால் குடும்பத்தாரும் இருந்துள்ளனர். கடந்த வெள்ளி அன்று இரவு 11.30 மணியளவில் நீலம் திக்கிவாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அடுத்த நாள் காலையில் செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகளில் ‘அபிநந்தன்’ நாடு திரும்பிய செய்தியைப் பார்த்துள்ளனர். அவர்களும் தங்களது குழந்தைக்கு அபிநந்தன் என பெயர் சூட்டி உள்ளனர்.