அரசியலுக்காக சாமியார் குர்மீத்திடம்சரணடைந்துவிட்டீர்கள்...முதல்வர் மனோகர் லால் கட்டார் அரசை ‘விளாசியது’ உயர் நீதிமன்றம்...

அரசியல் காரணங்களுக்காக சாமியார் குர்மீத் சிங்கிடம் அரியானாவில் ஆளும் மனோகர் லால் கட்டார் தலைமையிலான அரசு சரணடைந்துவிட்டது என்று உயர் நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.

பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் சிங்கை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து, அரியானா, பஞ்சாபில் கட்டுக்கடங்காத கலவரம் நிகழ்ந்தது. இதில் 32 பேர் கொல்லப்பட்டனர், 350-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஏராளமான அரசு பஸ்கள், கார்கள், வாகனங்களை வன்முறையில் ஈடுபட்ட, சாமியார் குர்மீத்தின் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கி, தீவைத்தனர்.

இதையடுத்து, பஞ்ச்குலா நகரில் அமைதியை நிலைநாட்ட அரசுக்கு உத்தரவிடக்கோரி பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதை விசாரணை செய்த உயர் நீதிமன்றம் பொதுச்சொத்துக்களுக்கு நேர்ந்த சேதத்துக்கு, சாமியார்குர்மீத் சிங்கின் சொத்துக்களை முடக்க உத்தரவிட்டது. அவரின் சொத்துக்களை விற்று இழப்பீட்டை வசூல் செய்யவும் ஆணையிட்டது.

 

இந்நிலையில், இந்த மனுவின் விசாரணை உயர் நீதிமன்ற முழு அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி, எஸ். சிங் சரோன், நீதிபதி அவநீஷ் ஜிங்கன், நீதிபதி சூர்ய காந்த் ஆகியோர் கொண்ட முழு அமர்வு மாநில அரசை கடுமையாகச் சாடி கருத்துக்களைத் தெரிவித்தனர். அப்போது நீதிபதிகள் கூறியதாவது-

முதல்வர் மனோகர் லால் கட்டார், தேரா சச்சா சவுதா அமைப்பின் ஆதரவாளர்களை பாதுகாக்கும் நோக்கில் செயல்படுகிறார். அவர்களுக்கு அரசியல் ரீதியாக அடைக்கலம் கொடுக்கிறார். இங்கு நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும் போது, ஆளும் பா.ஜனதா அரசு, தேரா சச்சா சவுதா அமைப்பினரிடம், அரசியல் காரணங்களுக்காக சரணடைந்துவிட்டதாக கருதுகிறோம்.

ஆனால், முதல்வர் மனோகர் லால் கட்டாரோ கலவரத்துக்கு சமூக விரோதிகள்காரணம் என்று அறிக்கை விடுத்துள்ளார். அண்டை மாநிலங்களான பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லிக்கும் கலவரம் பரவ இதுதான் காரணம் என்கிறார்.

சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததும், தேரா சச்சா சவுதா அமைப்பின் ஆதரவாளர்களுடன் சமூக விரோதிகள் கலந்துவிட்டார்கள் என்று உங்களுக்கு உடனுக்குடன் தெரிந்துவிட்டதோ?. பஞ்ச்குலாவில் தேரா அமைப்பைச் சேர்ந்த ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானவர்களை எப்படி ஒன்று சேரவிட்டீர்கள்?, அரசின் தடுப்பு நடவடிக்கை தோல்வி அடைந்து விட்டது.

தேரா சச்சா அமைப்பின் சொத்துக்கள் எதையும் விற்பனை செய்யவோ, பரிமாற்றம் செய்யவோ, லீசுக்கு விடவோ தடை செய்கிறோம். சாமியார் குர்மீத்தின் அசையும், அசையா சொத்துக்கள் விவரங்களையும், தேரா அமைப்பின் சொத்துக்களின் பட்டியலையும் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிடுகிறோம்.

எதிர்காலத்தில் இதுபோன்ற சூழல் நேராமல் தடுக்க பஞ்சாப், அரியானா அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்போகிறது என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், கலவரத்தால் ஏற்பட்ட சேதங்கள், அதன் மதிப்பு குறித்து பஞ்சாப், அரியான மாநில துணை கமிஷனர்கள் அறிக்கையை அளிக்க வேண்டும்.

பஞ்ச்குலா சி.பி.ஐ. நீதிமன்றத்துக்கு சாமியார் குர்மீத் வரும் போது அவரின் பாதுகாப்பு வாகனங்கள் வந்த எண்ணிக்கை குறித்து ஆளும் பா.ஜனதா அரசு தவறான தகவல்களை நீதிமன்றத்துக்கு அளித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக ஒட்டுவங்கிக்காக மேற்கொள்ளப்பட்ட அரசியல்ரீதியான சரண்டர்என்றே கருதுகிறோம்.  இவ்வாறு அவர் தெரிவித்தனர்.

அடுத்த விசாரணையை 29-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.