நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பைத் தொடர்ந்து மக்கள் அனைவரும், முன் எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், வாரணாசி கோவிலில் அர்ச்சகர் ஒருவர் சாமி சிலைகளுக்கு முகக்கவசம் அணிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கோவில் அர்ச்சகர் கிருஷ்ண ஆனந்த் பாண்டே கூறுகையில், ’நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அதனால், கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், விஸ்வநாதர் சிலைக்கு முகக்கவசம் அணிவித்துள்ளோம். குளிர்காலங்களில் சிலைகளில் துணிகளைப் போர்த்துவது போலவும், வெயில் காலங்களில் ஏசி அல்லது மின்விசிறி போடுவது போலவும், தற்போது சாமி சிலைகளுக்கு முகக்கவசம் அணிவித்துள்ளோம்.

 கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் சாமி சிலைகளைத் தொடக்கூடாது என்றும் அந்த அர்ச்சகர் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளேன்.  
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சாமி சிலைகளைப் பொதுமக்கள் யாரும் தொடக்கூடாது எனக் கேட்டுக்கொண்டுள்ளோம். அப்படி பொதுமக்கள் சிலைகளைத் தொடும்போது, வைரஸ் மற்றவர்களுக்கும் பரவி பலர் பாதிப்படைவார்கள்’’என அவர் கூறினார். தொடர்ந்து, அந்த கோவிலில் பக்தர்கள் மற்றும் அர்ச்சகர்கள் முகக்கவசம் அணிந்தபடியே, சாமி தரிசனம் மேற்கொள்கின்றனர்.