பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கு எதிரான கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என அனைத்து தரப்பினரும் ஒரு மித்த குரலில் கோரிக்கை விடுத்து வருகின்றன. குறிப்பாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் இருந்ததால் அந்த குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு உட்சபட்ச அளவில் கொடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் கருத்துகள் நிலவி வருகின்றனர்.

இந்தநிலையில் தெலுங்கானாவில் பெண்மருத்துவர் ஒருவர் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குற்றாவளிகள் நான்கு பேரும் இன்று அதிகாலையில் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொலை நடந்த இடத்தில் வைத்து தப்பி ஓட முயன்ற அவர்களை காவல்துறையினர் சுட்டு வீழ்த்தினர். இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே கற்பழிப்பு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு கருணை காட்ட கூடாது என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசியுள்ளார்.  ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபட்டு போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றவர்களுக்கு கருணை மனு அளிக்க உரிமை கிடையாது என்று கூறியிருக்கிறார்.  மேலும் நாடாளுமன்றம் இது குறித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இதனிடையே நிர்பயா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அளித்திருக்கும் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் குடியரசு தலைவருக்கு கோரிக்கை விடுத்திருக்கிறது.