ஆரோக்கியமான குழந்தை பிறக்க கர்ப்ப காலத்தில் பெண்கள் இறைச்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், தாம்பத்ய உறவு வைக்க கூடாது என்று மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் சார்பில் வௌியிடப்பட்ட நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச யோகா தினம்

உலக அளவில் சர்வதேச யோகா தினம் வரும் 21-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் ‘தாய் மற்றும் குழந்தை நலன்’  என்ற தலைப்பில் புத்தகம் வௌியானது. இந்த புத்தகம் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்துக்கான ஆய்வுக்கு குழு சார்பில் வௌியிடப்பட்டுள்ளது.

தாம்பத்தியம் தவிருங்கள்

இந்த புத்தகத்தில் ஆரோக்கியமான குழந்தை பிறக்க, கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகள் தான் இப்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது. பெண்கள் கருவுற்ற காலத்தில் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளக்கூடாது, இறைச்சியை கருவுற்ற பெண்கள் உண்ணக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம் என்ன சொல்கிறது?

ஆனால், மருத்துவத்தில், கருவுற்ற  பெண்களுக்கு அதிகமான புரோட்டீன்சத்துக்கள் வேண்டும் என்பதற்காக இறைச்சி வகைகளான கோழி, ஆட்டுக்கறி உள்ளிட்டவைகள் சாப்பிடலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், கருவுற்ற பெண்கள் குறிப்பிட்ட காலம் வரை தாம்பத்தியம் வைத்துக்கொள்ளலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அப்படி இருக்கையில் புதுவிதமாக அறிவுரைகள் இதில் வழங்கப்பட்டுள்ளன.

அறிவுரைகள்

மேலும், கர்ப்பிணிகள் கோபப்படாமல், கடவுள் பக்தியுடன், நேர்மறை சிந்தனை கொண்டவர்களிடம் இருந்து விலகி, நல்ல, தூய எண்ணங்கள் உள்ளவர்களுடன் இருக்க வேண்டும். வீட்டில் இயற்கை சூழல் கொண்ட படங்கள், கடவுள், குழந்தை படங்களை அடிக்கடி பார்க்கலாம், அமைதியான சூழலில் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அறிவுரைதான்..

இது குறித்து யோகா மற்றும் இயற்கை மருத்துவத்துக்கான ஆய்வுக்கு குழுவின் இயக்குநர் ஐஸ்வர்யா என். ஆச்சார்யா கூறுகையில், “ இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது அறிவுரைகள்தான். இதை யாரும் கட்டாயப்படுத்தி பின்பற்றக்கூறவில்லை.

யோகா, இயற்கை மருத்துவத்தில் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.  இயற்கை மருத்துவத்தின்படி, கர்பிணிகள் மாமிசத்தை சாப்பிடக்கூடாது என்பது தொடர்ந்து வலியுறுத்திவருவதாகும்’’ எனத் தெரிவித்தார்.

சர்ச்சைகள்

ஏற்கனவே மத்திய அரசு மாடு விற்பனை போன்றவற்றில் பல புதிய கட்டுப்பாடுகளை விதித்தது, சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

இந்த சூழலில் ஆரோக்கியமான குழந்தை பிறக்க என்பதை சுட்டிக்காட்டி, கர்ப்பணிகள் மாமிசத்தை தவிர்க்க வேண்டும் எனக் கூறியுள்ளது சமூக ஊடகங்களில் பெரிய விமர்சனத்தை  உண்டாக்கியுள்ளது.