நேபாளத்துக்கு புனித யாத்திரை சென்ற  ஏராளமானோர் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்து பக்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்திய பகுதியில் கைலாய மானசரோவர் ஏரி அமைந்துள்ளது. இங்கு சென்று வழிபட ஏராளமான பக்தர்கள் நேபாள நாட்டின் வழியாக யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.

இந்த ஆண்டும் கடந்த சில வாரங்களாக மானசரோவருக்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து  ஏராளமானோர் புனித யாத்திரை மேற்கொண்டுள்ளனர்.

மானசரோவர் அமைந்துள்ள திபெத்திய பகுதியிலும், அங்கு செல்வதற்கான நேபாள நாட்டின் மலைப்பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக மோசமான வானிலை நிலவி வருகிறது. தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. நிலச்சரிவு காரணமாக பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன.

இதையடுத்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கைலாஷ், மானசரோவர் யாத்திரைக்குச் சென்ற 1,500-க்கும் அதிகமானோர், நடுவழியில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களில் சுமார் 300 பேர் தமிழர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் காட்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் பிரணவ் கணேஷ், முருகன் ஆகியோர் புனித யாத்திரை சென்றவர்களை  மீட்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர்.

புனித யாத்திரை மேற்கொண்ட வயதான ஆண்களும், பெண்களும் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். தொடர்ந்து இதே நிலை நீடித்தால் இவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையும் உருவாகி உள்ளது.

சிமிகோட்டில் தங்கியிருக்கும் வயதில் மூத்தோர் அனைவருக்கும் உடற்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அவர்களுக்கு மருத்துவ உதவியும் அளிக்கப்படுகிறது.

இதற்கிடையே, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ராமச்சந்திரன் இந்த பயணத்தின்போது உயிர் இழந்தது, தெரிய வந்துள்ளது. இவர், தனது மனைவியுடன் மானசரோவருக்கு கடந்த மாதம் 18-ந்தேதி பயணம் மேற்கொண்டார்.நேற்று முன்தினம் மானசரோவரில் கிரிவலம் சென்றபோது கடும் குளிர் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு ராமச்சந்திரன் பரிதாபமாக உயிர் இழந்தார். அவரது உடல் நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து இந்தியாவுக்கு கொண்டுவரும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படுவதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதே நேரத்தில் அங்கு சிக்கிக் கொண்டவர்களில் சென்னையைச் சேர்ந்த 19 பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அடுத்த இரண்டு நாட்களில் தமிழகத்துக்கு வந்து சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.