டெல்லி மேற்கு நிஜாமுதீன் தப்ளிக் மையம் தான் இந்தியாவின் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக உருவெடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், டெல்லி மேற்கு நிஜாமுதீன் தப்ளிக் மையத்தில் கடந்த(மார்ச்) மாதம் 13-15 ஆகிய தேதிகளில் நடந்த ஜமாத்தில் கலந்துகொண்டவர்களில் 24 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

அந்த ஜமாத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, ஜம்மு காஷ்மீர் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து முஸ்லீம்கள் கலந்துகொண்டனர். மலேசியா, இந்தோனேஷியா, தாய்லாந்து ஆகிய வெளிநாடுகளிலிருந்து வந்திருந்த முஸ்லீம்களும் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்திய முஸ்லீம்கள் மட்டுமல்லாது வெளிநாட்டு முஸ்லீம்கள் உட்பட மொத்தம் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அந்த ஜமாத்தில் கலந்துகொண்டனர்.

இதையடுத்து அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட சொந்த மாநிலங்களுக்கு திரும்பியவர்களின் பட்டியலை எடுத்து, அவர்களை கண்டறிந்து கொரோனா பரிசோதனை செய்வது, அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை தனிமைப்படுத்துவது ஆகிய பணிகளை மாநில அரசுகள் மேற்கொண்டுவருகின்றன.

இந்நிலையில், நிஜாமுதீன் தப்ளிக் மையத்தில் இருந்தவர்களை அங்கிருந்து அகற்ற டெல்லி போலீஸார் முற்பட்டனர். ஆனால், அவர்கள் அங்கிருந்து வெளியேற மறுத்ததுடன், தங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ளவும் மறுத்தனர். இந்நிலையில், இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கியமான பொறுப்பில் உள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், வன்முறைகளை கட்டுப்படுத்தும் வகையில், முஸ்லீம் தலைவர்களுடன் நல்ல தொடர்பில் இருப்பதால், அவர் டெல்லி மேற்கு நிஜாமுதீன் தப்ளிக் மைய நிர்வாகிகளுடனும் முக்கியமான பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.

அஜீத் தோவல் தலையிட்டதையடுத்து, தப்ளிக் மையத்திலிருந்து வெளியேற அவர்கள் ஒப்புக்கொண்டதுடன், கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

தப்ளிக் ஜமாத் மையத்திலிருந்து வெளியேறவும் கொரோனா டெஸ்ட்டிற்கு தங்களை உட்படுத்திக்கொள்ளவும் மறுத்தவர்களை அஜீத் தோவல் தலையிட்டு, வெளியேற ஒப்புக்கொள்ள வைத்ததுடன், கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளவும் அவர்களை உடன்பட வைத்துள்ளார்.