முஸ்லிம் மதத்தில் விவாகரத்து அளிக்க கடைபிடிக்கப்படும் முத்தலாக் முறை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சட்ட அமர்வில் பெரும்பான்மை நீதிபதிகள் முத்தலாக் முறை சட்ட விரோதமானது என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

வழக்குகள்

முஸ்லிம் மதத்தில் தலாக் என்று 3 முறை கூறி (முத்தலாக்) விவாகரத்து பெறுவது வழக்கத்தில் உள்ளது. இந்த முறையானது பெண்கள் உரிமையை பறிப்பதாக பல்வேறு அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன. சிலர் இந்த முறையை தவறாக பயன்படுத்துவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. கடிதம், எஸ்.எம்.எஸ்., வாட்ஸ்அப் போன்றவற்றின் மூலமாக தலாக் கூறி ஆண்கள் விவகாரத்து பெற்று விடுவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். குறிப்பாக கடந்த 2015-ல் சராயா பானு என்பவரது கணவர், அவருக்கு தபால் மூலம் ‘தலாக்’ கூறி, அவரை விவாகரத்து செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக 6 மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

5 மத நீதிபதிகள்

மொத்தம் 7 மனுக்களை சீக்கிய மதத்தை சேர்ந்த தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த குரியன் ஜோசப், பார்சி மதத்தை சேர்ந்த ஆர்.எப். நாரிமன், இந்து மதத்தை சேர்ந்த யு.யு. லலித், முஸ்லிம் மதத்தை சேர்ந்த எஸ். அப்துல் நசீர் ஆகிய 5 நீதிபதிகள் விசாரித்து வந்தனர். விடுமுறைக் காலத்திலும் முத்தலாக் மீதான விசாரணை தொடர்ந்தது.

இரு தரப்பு வாதம்

தலாக் முறைக்கு ஆதரவாக அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உச்ச நிதிமன்றத்தில் பல்வேறு ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. இதன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ‘அயோத்தியில் ராமர் பிறந்தார் என்று நம்பப்படுவது போல முத்தலாக் நடைமுறை என்பது மக்கள் மத்தியில் இருக்கும் நம்பிக்கை. இது 1,400 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. எனவே இதற்கு தடை விதிக்க கூடாது’ என்றார்.

395 பக்க தீர்ப்பு

வழக்கை முழுவதுமாக விசாரித்த நீதிபதிகள் நேற்று தங்களது தீர்ப்பை வழங்கினர். அவர்கள் வழங்கிய இறுதி தீர்ப்பு 395 பக்கங்களை கொண்டதாக உள்ளது.

நீதிபதிகள் ஒவ்வொருவரும் மாறுபட்ட கருத்தை தெரிவித்திருந்தனர். 5 பேரில் 3 நீதிபதிகள் ‘முத்தலாக் முறையானது முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆன் கூறும் போதனைகளுக்கு எதிரானது. அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த முறை அரசியலமைப்பு சட்டத்திற்கும் எதிரானது’ என்று குறிப்பிட்டனர்.

6 மாதம் நிறுத்திவைப்பு

வழக்கை விசாரித்த நீதிபதிகளில் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், நீதிபதி அப்துல் நசீர் ஆகியோர் ‘முத்தலாக் முறையை 6 மாதத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்களது வேறுபாடுகளை களைந்து, மத்திய அரசு சட்டம் இயற்றுவதற்கு உதவ வேண்டும். 6 மாதங்களுக்குள் மத்திய அரசு சட்டம் கொண்டு வராவிட்டாலும் முத்தலாக் முறை மீதான தடை உத்தரவு நீடிக்கும். இந்த விவகாரத்தில், முஸ்லிம் அமைப்புகளின் கவலைகளையும், ஷரிஅத் சட்டத்தையும் கருத்தில் கொண்டு மத்திய அரசு சட்டத்தை ஏற்படுத்தும் என்று உச்ச நீதிமன்றம் நம்புகிறது’ என்றனர்.

சட்டத்துக்கு எதிரானது

இந்த நீதிபதிகளை தவிர்த்து மற்ற 3 நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், ‘தலாக் என்று மூன்று முறை கூறி விவாகரத்து பெறும் முறையானது முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆனின் போதனைகளுக்கு எதிரானது. இதனை பகிரங்கமான முறையில், தன்னியச்சையான போக்குடன் கடைபிடித்து வருகின்றனர். இது அரசியலமைப்பு சட்டத்தை மீறும் செயலாகும். சட்டவிரோதமான இந்த முத்தலாக் முறை நிச்சயமாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றனர்.

5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் பெரும்பான்மை நீதிபதிகள் முத்தலாக் முறை சட்டவிரோதமானது என்று தீர்ப்பு வழங்கியதால் அதுவே, உச்ச நீதிமன்ற தீர்ப்பாக இறுதி செய்யப்பட்டுள்ளது.