எம்.பி.யும் சாமியாருமான சாக்சி மகாராஜ், நைட் கிளப் ஒன்றைத் திறந்து வைத்துள்ளார். தன்னை ஏமாற்றி நைட் கிளப் திறந்து வைத்துள்ளதாக சாக்சி மகாராஜ் புகார் கூறியுள்ளார்

உத்தரபிரதேச மாநிலம், உன்னாவோ தொகுதி எம்.பி.யான சாக்சி மகராஜ், சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். லக்னோவில் உள்ள லெட்ஸ்மீட் என்ற நைட் கிளப்பை ரிப்பன் வெட்டி அவர் திறந்து வைத்துள்ளார்.

பாஜகவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ரஞ்சன் சிங்கின் மருமகனுக்கு சொந்தமான இந்த லெட்ஸ்மீட் நைட்கிளப். சாக்சி மகாராஜ், லக்னோவுக்கு வேறு வேலை நிமித்தமாக சென்றுள்ளார். 

வேலையை முடித்துக் கொண்டு டெல்லிக்கு புறப்பட ஆயத்தமானார். அந்த நிலையில், சாக்சி மகாராஜை அணுகிய ரஞ்சன் சிங், புதிய ரெஸ்டாரன்டைத் திறந்து வைக்குமாறு கேட்டுள்ளார்.

இதற்கு சம்மதம் தெரிவித்த சாக்சி மகாராஜ், ரிப்பன் வெட்டி நைட் கிளப்பை திறந்துள்ளார். ரிப்பன் வெட்டிய பிறகு உள்ளே சென்ற சாக்சி மகாராஜ் அதிர்ச்சி அடைந்துள்ளார். தான் திறந்தது ரெஸ்டாரன்ட் இல்லை என்பது அது நைட் கிளப் என்பதும் தெரிந்து அதிர்ந்து போனார். 

நைட் கிளப் உள்ளே ஏராளமான மது வகைகள் நிறைந்த பார் உள்ளிட்டவைகள் இருந்தன. இதனைப் பார்த்த சாக்சி மகாராஜ் மிகுந்த கோபமடைந்தார். இதன் பின்னர், உத்தரபிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் மகேந்திர நாத் பாண்டேவிடம் சென்று ரஞ்சன் சிங் தன்னை ஏமாற்றி நைட் கிளப்பை திறக்க வைத்து விட்டதாக புகார் கூறினார்.

இந்த புகாரை அடுத்து இந்திய தண்டனைச் சட்டம் 420-ன் கீழ் ஏமாற்றியதாக ரஞ்சன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நான் எம்.பி. மட்டுமல்ல; சாதுவும் கூட... ரெஸ்டாரன்ட் என்று கூறி தன்னை ஏமாற்றி விட்டதாக கூறுகிறார் சாக்சி மகாராஜ்.