மகாராஷ்டிரா முதல்-அமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் ரெயில்வே அமைச்சர் ஆவாரா? என்ற கேள்விக்கு பா.ஜனதா மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி பதில் அளித்தார்.

முதல்–வர் தேவேந்திர பட்னாவிஸ் மாநில அரசில் இருந்து விலகி, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபையில் இடம்பெற போவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகின. எனினும், இந்த தகவலை அவர் திட்டவட்டமாக மறுத்து வந்தார்.

இது தொடர்பாக சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தின்போது கருத்து தெரிவித்த அவர், ‘‘நான் டெல்லிக்கு (அதாவது மத்திய அரசு) செல்வதற்கான சாத்தியக்கூறு இப்போதைக்கு இல்லை’’ என்று கூறினார்.

இந்த சூழலில், உத்தர பிரதேசத்தில் வெறும் 4 நாட்களில் இரண்டு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகி, ஏராளமானோரை பலி கொண்டது. இந்த விபத்துகளுக்கு தார்மீக பொறுப்பு ஏற்று ரெயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு பதவி விலக முன்வந்தார்.

ஆகையால், சுரேஷ் பிரபுக்கு பதிலாக, மகாராஷ்டிரா முதல்– அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், ரெயில்வே

பரபரப்பான இந்த தருணத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி நாக்பூரில் உள்ள தன்னுடைய இல்லத்தில் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அப்போது, அவரிடம் தேவேந்திர பட்னாவிஸ் மத்திய அமைச்சர் பதவி ஏற்பாரா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நிதின் கட்காரி பதில் அளித்ததாவது:–-

தேவேந்திர பட்னாவிஸ் மராட்டியத்தில் ஏராளமான நற்பணிகளை செய்வதாக நான் கருதுகிறேன். அதே சமயத்தில், மத்தியிலும் சிறப்பான பணிகளை ஆற்றுவதற்கான தகுதியும், திறமையும் அவரிடம் இருக்கிறது.

ஆனால், மாநிலத்தில் தற்போது நிலவும் பிரச்சினைகளையும், சவால்களையும் கருத்தில் கொள்ளும்போது, அவரது தலைமை மராட்டியத்துக்கு தேவை என்றே எண்ண தோன்றுகிறது. இருப்பினும், அவர் மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது பற்றி தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதன் மீது பிரதமர் மோடி தகுந்த முடிவை எடுப்பார்.

இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்தார்.

ரெயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு பதவியை ராஜினாமா செய்யும்பட்சத்தில், ரெயில்வே அமைச்சக பொறுப்பை தேவேந்திர பட்னாவிஸ் ஏற்பாரா? என்று கேட்டதற்கு, ‘‘நான் நேற்று தான் அமெரிக்காவில் இருந்து திரும்பினேன். இந்த ஊகங்களை உங்களிடம் (நிருபர்கள்) இருந்து தான் கேள்விப்படுகிறேன்’’ என்று நிதின் கட்காரி பதில் அளித்தார்.

மேலும், ரெயில்வே மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகங்களை ஒரே அமைச்சகத்தின்கீழ் கொண்டு வர அரசு திட்டமிடுகிறதா? என்று கேட்டதற்கு, ‘‘அமெரிக்க ஐக்கிய நாடுகளில் விமானம், ரெயில்வே மற்றும் நீர்வழி போக்குவரத்து ஆகியவை ஒரே அமைச்சகத்தின்கீழ் செயல்படுகின்றன. ஒரு சில நாடுகளில் இந்த அமைச்சகங்கள் தனித்தனியாக செயல்படுகின்றன. இவற்றை ஒரே அமைச்சகத்தின்கீழ் கொண்டு வருவது பற்றி பிரதமரே முடிவு எடுப்பார்’’ என்றார்.