மகாராஷ்டிராவில் பேருந்தும்- ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கிணற்றுக்குள் தலைக்குப்புற பேருந்து கவிழ்ந்ததில் 9 பெண்கள் உள்பட 26 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டம், மாலேகான் டியோலா சாலையில் வேகமாக சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தும், ஆட்டோவும் கண் இமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. மோதிய வேகத்தில் இரண்டு வாகனங்களும், சாலையோரம் உள்ள கிணற்றில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்து தொடர்பாக உடனே போலீசாருக்கும், மீட்புக்குழுவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த மீடபு படையினர் மற்றும் பொதுமக்கள் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த விபத்தில் இதுவரை 9 பெண்கள் உள்பட 26 பேர் உயிரிழந்துள்ளனர். 18-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிணற்றுக்குள் யாரேனும் சிக்கி இருக்கலாம் எனக் கருதி, கிணற்று நீர் முழுவதையும் இறைக்கும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதற்கிடையே விபத்தில் உயிரிழந்த 26 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். மேலும், விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பயணிகளுக்குத் தேவையான முதல் தரமான மருத்துவ வசதிகளைச் செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

இது தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் நடந்த விபத்து மிகவும் துயரமானது, எனக்கு வேதனையளிக்கிறது. சொந்தங்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவாகக் குணமடையப் பிரார்த்திக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.