கொரோனா வைரஸ் தாக்கம் பரவியதை அடுத்து கடந்த19ஆம் தேதி இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களிடம் உரையாற்றினார் மோடி. அப்போது 22 ஆம் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வீடுகளுக்குள் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், மாலை 5 மணிக்கு கைதட்டி மருத்துவ மற்றும் பிற சேவைகளில் உள்ள ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவிக்க கேட்டுக்கொண்டார். ஒட்டுமொத்த நாட்டு மக்களும் அப்படியே பின்பற்றினர். 

ஆனால் மறுநாள் முதல் மறுபடியும் இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பினர். இவ்வாறு மக்கள் அரசு சொல்வதை கேட்காமல், நடந்து கொள்வது சரியல்ல என்று பிரதமர் மோடி நேற்று ஆதங்கம் தெரிவித்திருந்தார்.இந்த நிலையில், இன்று இரவு 8 மணிக்கு அவர் மறுபடியும் தொலைக்காட்சியில், உரையாற்ற தொடங்கியுள்ளார்.

மீண்டும் ஒருமுறை கொரோனா பாதிப்பு பற்றி பேச வந்துள்ளேன். பெரியவர்கள் மட்டுமின்றி, குழந்தைகள், வியாபாரிகள் எல்லோரும் இணைந்து கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும். சமூக விலகல்தான் இந்த வியாதியை விரட்டும் ஒரே வழி. ஒவ்வொரு இந்தியனுக்கும் ஒத்துழைப்பு தர நான் அழைப்பு விடுக்கிறேன்.

கொரோனா வைரஸை, விளையாட்டாக நினைக்காதீர்கள். அது யாரையும் விட்டுவைப்பதில்லை, நம்மை தாக்காது என்று யாரும் அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். நோயாளிகளுக்கு மட்டும்தான் சமூக விலகல் என்று சிலர் தவறாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். சமூக விலகல் என்பது அனைத்து குடிமக்களுக்குமானது.

எனவே, இன்று இரவு 12 மணி முதல் நாடு முழுவதும் லாக்டவுன் செய்யப்படும். நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது. இந்த ஊரடங்கு என்பது உங்களையும், உங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பதற்காக தான். இந்த லாக்டவுன், என்பது ஜனதா ஊரடங்கு மாதிரி இல்லை. அதைவிட கடுமையாக பின்பற்றப்படும். அடுத்த 21 நாட்களுக்கு இந்த லாக்டவுன் அமலில் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்