பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரும், சாமியாருமான குர்மீத் ராம் ரஹீமுக்கு சிறையில் ராஜமரியாதை அளிக்கப்பட்டது.பெண் உதவியாளர் ஒருவர் உடன் மினரல்வாட்டருடன் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர், சாமியார் குர்மீத் ராம் ரஹீம். கடந்த 2002ம் ஆண்டு தனது பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்குதொடரப்பட்டது. அதன் பின் இந்த வழக்கின் விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றி பஞ்சாப் அரியானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

கடந்த 15 ஆண்டுகளாக சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்த நிலையில், விசாரணை முடிந்த நேற்று முன்தினம் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் சாமியார் குர்மீத் சிங் பாலியல் பலாத்காரம் செய்தது உண்மைதான், அவர் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்றம், 28-ந்தேதி தண்டனை விவரங்களை அளிக்கப்படும் என அறிவித்தது. 

இதையடுத்து, பஞ்சாப், அரியானாவில் சாமியார் குர்மீத் சிங்கின் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் 32 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமான பஸ், அரசு வாகனங்கள், தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பு வாகனங்கள் அடித்து நொறுக்கி தீவைக்கப்பட்டன. கலவரத்தில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் 350 பேர் காயமடைந்தனர். 

நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து, சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் பஞ்ச்குலாநகரில் இருந்து சிறப்பு ஹெலிகாப்டர் மூலம், ரோடக் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருடன் ஒரு பெண் உதவியாளர் ஒருவர் ஒரு சூட்கேஸில்சாமியாருக்கு தேவையான பொருட்கள், உடைகள், மினரல் வாட்டர் கேனுடன் உடன் சென்றார். 

முதலில் இவர்கள் இருவரும் ரோடக் நகரில் உள்ள போலீசாரின் விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு போலீசார் பலத்த பாதுகாப்புஏற்பாடுகளைச் செய்து இருந்தனர். 

அதன் பின் மாலை அங்கிருந்து சாமியார் குர்மீத் சிங், பலத்த பாதுகாப்புடன் ரோடக்நகரில் உள்ள பிரத்யேகமாக அமைக்கப்பட்ட சுனாரியா சிறப்பு சிறையில் அடைக்கப்பட்டார். 

அந்த சிறையில், இவருக்கு உதவியாளர் ஒருவரும், ஏ.சி. வசதியும், சொகுசாக இருப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டன என்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறைத்துறை டி.ஜி.பி. மறுப்பு

அரியானா சிறைத்துறை டி.ஜி.பி. கே.பி.சிங் கூறியதாவது-

சாமியார் குர்மீத் அடைக்கப்பட்டுள்ள சுனாரியா சிறையில் அவருக்கு எந்தவிதமான சொகுசு வசதிகளும் செய்யப்படவில்லை. அவர் சாதாரண கைது போலவே நடத்தப்படுகிறார். முதல் நாள் இரவு சிறையில் தரையில்தான் படுத்து தூங்கினார். உடன் எந்த விதமான உதவியாளர்களும் தங்க வில்லை. சிறையில் இருப்பவர்கள் நாள் ஒன்றுக்கு 5 பேரை சந்திக்க அனுமதி உண்டு அதே வசதிதான் குர்மீத்துக்கும் செய்யப்பட்டுள்ளது.

சிறையில் குர்மீத்துக்கு எந்த விதமான பாதுகாப்பு குறைபாடுகளும் இல்லாத அளவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சிறையிக்கு உள்ளேயும்,வௌியேயும் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.