பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் பாதிரியார் ஒருவர் சரண் அடைந்தார். கேரளாவின் மல்லப்பள்ளி அருகே உள்ள ஆனிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சன். இவர் துபாயில் தங்கி பணிபுரிந்து வரும்நிலையில் மனைவியும், 2 குழந்தைகளும் கேரளாவில் இருந்தனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் ஜான்சன் மனைவியின் கிரெடிட் கார்டில் இருந்து அடுத்தடுத்து பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மனைவியிடம் விசாரித்த ஜான்சனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

திருமணத்திற்கு முன்பு ஜான்சனின் மனைவி தனது உறவினரும் பாதிரியாருமான ஒருவரால் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், இந்த சம்பவத்தை தெரிவிக்காமல் ஜான்சனை திருமணம் செய்து கொண்டு இரு குழந்தைகளை பெற்றெடுத்த பிறகும் மனதை உறுத்தி உள்ளது. ஜான்சனின் மனைவி, இதற்காக பாவமன்னிப்பு கேட்பதற்கு மலங்கரை தேவாலயத்துக்குச் சென்றுள்ளார். அங்கிருந்த பாதிரியாரிடம் நடந்தவற்றை கூறி பாவமன்னிப்பு கேட்க, அந்த பாதிரியாரோ இந்த சம்பவத்தை ஜான்சனிடம் சொல்லாமல் இருக்க வேண்டுமானால் தன்னுடைய விருப்பத்துக்கு இணங்க வேண்டும் என கூறினார்.

இதையடுத்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றிற்கு அழைத்துச் சென்ற அந்த பாதிரியார், ஜான்சன் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்து, அவருக்கு தெரியாமல் வீடியோவாகவும் எடுத்துள்ளார். அந்த வீடியோவை வைத்து மிரட்டி, பலமுறை அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார், அடுத்த சில நாட்களில் அந்த வீடியோவை வேறு சில பாதிரியார்களுக்கு அனுப்பி உள்ளார். அவர்களும் ஜான்சனின் மனைவியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர்.

கரும்பு தின்னதற்கு கூலி கேட்பது போல, அதில் ஒரு பாதிரியார் ஜான்சன் மனைவியை மிரட்டி அவ்வப்போது பணமும் பறித்துள்ளார். மேலும் தனக்கு தேவையான பொருட்களையும் கேட்டு வாங்கியுள்ளார் அந்த பாதிரியார். அவருக்கு பொருட்களை வாங்கி கொடுப்பதற்காக பயன்படுத்தப்பட்ட கிரெடிட் கார்டு மூலமே இந்த விவகாரம் அனைத்தும் ஜான்சனுக்கு தெரியவந்தது. இது தொடர்பாக தேவாலய நிர்வாகத்திடம் ஜான்சன் புகார் அளித்தும்  நடவடிக்கை எடுக்காத நிலையில், கேரளா மட்டுமின்றி, நாடு முழுவதும் இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, குற்றஞ்சாட்டப்பட்ட பாதிரியார்கள்  சோனி வர்க்கீஸ், ஜாப் மேத்யூ, ஜெய்ஸ் கே ஜார்ஜ், ஜான்சன் மேத்யூ ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்த கேரள டி.ஜி.பி. உத்தரவிட்டார். காவல்துறையினரும் 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த நிலையில், கேரள உயர்நீதிமன்றத்தில் அவர்கள் முன் ஜாமீன் மனுத் தாக்கல் செய்தனர். ஆனால் முன் ஜாமீன் தரமறுத்த நீதிமன்றம், விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டது. இதையடுத்து, பாதிரியர்கள் சோனி வர்க்கீஸ் மற்றும் ஜான்சன் மேத்யூ ஆகியோர் உச்சநீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், மற்றொரு பாதிரியாரான ஜாப் மேத்யூ, கேரள குற்றப்புலனாய்வு டி.எஸ்.பி. முன்னிலையில் சரண் அடைந்தார். பின்னர் அந்த பாதிரியார் கைது செய்யப்பட்டார்.