எங்கள் வீட்டில் சிறுமிகள் உள்ளனர். எனவே பாஜகவினர் வாயிற்கதவிற்கு வெளியே நிற்குமாறு கேரளாவில் பல வீடுகளில் எழுதி மாட்டப்பட்டுள்ளது. 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி ஆசிஃபா பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அரசு அதிகாரி, காவல்துறை அதிகாரிகள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நடந்த பேரணியில் அம்மாநில பாஜக அமைச்சர்கள் சௌதரி லால் சிங், சந்தர் பிரகாஷ் கங்கா ஆகிய இருவரும் கலந்துகொண்டனர். சிறுமிக்கு நீதி வேண்டியும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியும் தேசம் முழுவதும் வலுவான குரல்கள் ஒலிக்கும் வேளையில், குற்றம் சாட்டப்பவர்களுக்கு ஆதரவாக பாஜக அமைச்சர்கள் பேரணியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்தனர். இதுதொடர்பாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்து, பாஜக அமைச்சர்களின் செயல் குறித்தும் அதனால் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள எதிர்ப்பு குறித்தும் எடுத்துரைத்தார். இதையடுத்து அந்த அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர்.

உத்தர பிரதேசம் மாநிலம் உனா நகரில் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார். இதுதொடர்பான விசாரணையில் அந்த மாணவியின் தந்தை மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த விவகாரமும் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த வழக்கில் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த இரண்டு விவகாரங்களும் தேசிய அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில், கேரளாவில் சில வீடுகளில் பாஜகவினர் வீட்டிற்குள் வரவேண்டாம். எங்கள் வீட்டில் சிறுமிகள் உள்ளனர்.

எதுவாக இருந்தாலும் கேட்டிற்கு வெளியே நில்லுங்கள் என எழுதி தொங்கவிட்டுள்ளனர். இதை ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் எழுதி நிறைய வீடுகளில் தொங்கவிட்டுள்ளனர்.