தேனீர் மற்றும் நொறுக்குத் தீனிக்காக டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால அலுவலகம், கடந்த 3 ஆண்டுகளில் ஒரு கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தெரியவந்துள்ளது.

டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் அரசின் அன்றாட செலவுகள் குறித் விவரங்களை ஹேமந்த் சிங் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கோரி இருந்தார். இது குறித்த விவரங்கள் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதில், முதலமைச்சர் கெஜ்ரிவால் அலுவலகத்தில் தேனீர் மற்றும் சமோசா உள்ளிட்ட நொறுக்கு தீனிக்காக கடந்த 3 ஆண்டுகளில் ஒரு கோடியே 3 லட்சத்து 4 ஆயிரத்து 162 ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2015 - 16 நிதியாண்டில் 23.12 லட்சமும், 2016 - 17 நிதியாண்டில் 46.54 லட்சமும், 2017 - 18 நிதியாண்டில் 33.36 லட்சமும் செலவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ஹேமந்த் சிங் கூறுகையில், மக்களிடம் இருந்து பெறப்படும் வரிப்பணம், மக்களுக்காக மட்டுமே செலவு செய்யப்பட வேண்டும். அரசின் திட்டங்களுக்கு நிதி செலவழிப்பதில் தவறில்லை. அதே சமயம் முதலமைச்சர் அலுவலகத்தில் தேனீருக்காக இவ்வளவு பெரிய தொகை செலவு செய்வதை ஏற்க முடியாது என்றும் டெல்லி அரசு வீண் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

ஆம் ஆத்மி அரசு பதவியேற்ற ஓராண்டிலேயே, டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் அமைச்சர்கள் நொறுக்குத் தீனிக்காக ஏறக்குறைய ஒரு கோடி ரூபாய் செலவு செய்ததாக ஏற்கனவே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.