காஷ்மீரில் 8 போலீசார் வீர மரணம் அடைந்த தற்கொலைப் படை தாக்குதலை நடத்தியவர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்ற அதிர்ச்சி தகவலை போலீசார் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள போலீஸ் குடியிருப்புக்குள் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதிகாலையில் தொடங்கிய இந்த தற்கொலைப்படை தாக்குதல் இரவு வரை நீடித்தது.

முன்னெச்சரிக்கையாக குடியிருப்பில் இருந்த 25 குடும்பத்தினர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து பதிலடியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். இதற்கிடையே தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வைத்துச் சென்றனர். அதனை செயலிழக்கச் செய்ய முயன்றபோது குண்டுகள் வெடித்தன.

இதில் ரிசர்வ் போலீசார் 2 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் தரப்பில் 2 ரிசர்வ் போலீசார், காஷ்மீர் போலீசார் ஒருவர், எஸ்.பி.ஓ. எனப்படும் சிறப்பு போலீசார் 3 பேர் என 6 வீரர்கள் உயிரிழந்தனர்.

தாக்குதலின் முடிவில் பாதுகாப்பு படையினர் 8 பேர் வீர மரணம் அடைந்தனர். 3 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற பின்னர் அவர்களது தரப்பில் இருந்து துப்பாக்கிச் சூடு ஏதும் ஏற்படவில்லை.

இதையடுத்து, நேற்று இரவில் தாக்குதல் நிறுத்திக் கொள்ளப்பட்டது. இந்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் உடலை பாதுகாப்பு படையினர் கைப்பற்றி உள்ளனர். இதுகுறித்து பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறும்போது, தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து 3 தீவிரவாதிகளின் உடல்களை கைப்பற்றி உள்ளோம்.

அவர்கள் அனைவரும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். அவர்கள் எந்த தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார். சண்டையின்போது வீர மரணம் அடைந்த பாதுகாப்பு படை வீரர்களின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.