எனது உத்தரவு 24 மணி நேரத்தில் மாற்றப்படுவதை நான் விரும்பவில்லை என கூறி, உச்சநீதிமன்றத்திற்கு வரும் வழக்குகளை நீதிபதிகளுக்கு ஒதுக்கீடு செய்வதற்கான விதிமுறைகளை வகுக்க கோரிய மனுவை விசாரிக்க நீதிபதி செல்லமேஸ்வர் தலைமையிலான அமர்வு மறுத்துவிட்டது.

இதுவரை நீதித்துறை வரலாற்றில் இல்லாத அளவிற்கு, தலைமை நீதிபதி மீது மூத்த நீதிபதிகள் நால்வர் கடந்த ஜனவரி மாதம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி லோகூர் ஆகியோர், உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை நீதிபதிகளுக்கு ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது, நீதிமன்றத்தில் நிர்வாகம் சரியில்லை, ஜனநாயகம் இல்லை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்த சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், வழக்குகளை நீதிபதிகளுக்கு ஒதுக்கீடு செய்வது மற்றும் நீதிபதிகள் அடங்கிய அமர்வை உருவாக்குவதற்கு விதிமுறைகளை வகுக்க வேண்டும் எனவும் வழக்குகள் ஒதுக்கப்படுவதில் வெளிப்படை தன்மையை உறுதி செய்ய வேண்டும் எனவும் லக்னோவை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். 

அந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கான்வில்கர் மற்றும் சந்திரசூட் அடங்கிய அமர்வு, உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை ஒதுக்கீடு செய்வது, நீதிபதிகள் அமர்வை உருவாக்குவது ஆகியவை எல்லாம் தலைமை நீதிபதியின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. அவற்றிற்கெல்லாம் ஏற்கனவே விதிகள் உள்ளன எனக்கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.

இந்நிலையில் இதேபோன்ற மற்றொரு வழக்கை மூத்த வழக்கறிஞர் சாந்தி பூஷணும் தாக்கல் செய்தார். இந்த வழக்கு தொடர்பாக அவரது மகனும் வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண் ஆஜரானார். இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற பதிவாளரிடம் முறையிட்ட அவர், தலைமை நீதிபதியின் அதிகாரத்தை கேள்வி கேட்கும் இந்த வழக்கை அவரது தலைமையிலான அமர்வு விசாரிக்க கூடாது, மற்ற மூத்த நீதிபதிகள் அமர்வு விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் இதுபோன்ற வழக்கை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்துள்ளதால், வேறு ஒரு அமர்வு மட்டுமே விசாரிக்க வேண்டும் எனவும் பிரசாந்த் பூஷண் கோரியிருந்தார். இதையடுத்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது மூத்த நீதிபதியான செல்லமேஸ்வர் தலைமையிலான அமர்வு முன் வழக்கு பட்டியலிடுவதற்காக வந்தது. ஆனால், இந்த வழக்கை விசாரிக்க நீதிபதி செல்லமேஸ்வர் மறுத்து விட்டார்.

இந்த வழக்கை விசாரிக்க மறுத்த செல்லமேஸ்வர், எனது பதவிக்காலம் இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ளன. எனவே இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை. எனது உத்தரவில் 24 மணிநேரத்திற்குள் மாற்றம் வருவதை நான் விரும்பவில்லை. இந்த விஷயத்தில் நாடுதான் முடிவு செய்யும் என தெரிவித்தார். 

செல்லமேஸ்வர் மட்டுமின்றி அவரது அமர்வில் உள்ள மற்றொரு மூத்த நீதிபதியான சஞ்சய் கிஷன் கவுல், சக நீதிபதியான செல்லமேஸ்வருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த விரும்பாததால் இந்த அமர்வு விசாரிக்க விரும்பவில்லை எனக் கூறினார்.