தனியார் வங்கியில் பணிபுரியும் இத்தாலியைச் சேர்ந்த பெண் ஒருவர், காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், மும்பையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். கடந்த மாதம் 14 ஆம் தேதி அன்று ஜூஹூ
பகுதியில் பேருந்துக்காக இவர் காத்துக் கொண்டிருந்தார். மும்பையைச் சுற்றிப் பார்ப்பதற்காக அவர் பேருந்துக்கு காத்துக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த பெண்ணிடம் வந்த ஒருவர், தன்னை டூரிஸ்ட் கைடு என்று கூறியுள்ளார். நடிகர் அமிதாப் பச்சனின் வீட்டை காட்டுவதாக அவர் கூறியுள்ளார். 

அவர் கூறியதைக் நம்பிய இத்தாலி பெண்ணும், அவருடன் காரில் சென்றுள்ளார். கார் சென்று கொண்டிருந்தபோது, மதுபான கடை அருகே வண்டியை நிறுத்திய
'டூரிஸ்ட் கைடு' மது பாட்டில்களை வாங்கி வந்தார்.

மேலும், காரிலேயே அந்த நபர் மது குடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் இத்தாலி பெண்ணையும் குடிக்கச்சொல்லி வற்புறுத்தி உள்ளார். போதை தலைக்கேறிய
அந்த நபர், இத்தாலி பெண்ணை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்து, அந்த பெண்ணை இறக்கி விட்டு சென்றுள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட அந்த பெண், இத்தாலி தூதரகத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து
விசாரணை நடத்தி வருகின்றனர்.