கல்வி, வேலைவாய்ப்புக்கான  இட ஒதுக்கீட்டு  சலுகையை  பெறுவதற்கு  பிற்படுத்தப்பட்டோரின் வருமான உச்சவரம்பை  8 லட்சமாக  உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கவும், மத்திய அரசின் வேலை வாய்ப்புகளைப் பெறவும் ஓ.பி.சி. என்றழைக்கப்படுகிற இதர பிற்படுத்தப்பட்டோருக்கு தற்போது 27 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. இதற்கு ஓ.பி.சி. சான்றிதழ் அவசியம்.

இந்த சான்றிதழை பெற வேண்டுமானால், அதற்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் .6 லட்சம் ரூபாய்க்குள்  இருக்க வேண்டும் என்பது தற்போது அமலில் இருந்து வருகிற விதிமுறை.

ஆனால் தற்போதைய விலைவாசி உயர்வு, பண வீக்க சூழலில் இந்த வரையறைக்குள் வர முடியாத நிலை உள்ளதால் இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு சலுகையை பெற்று அனுபவிக்க முடியவில்லை.இதனால் இந்த உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது.

இந்த கிரிமிலேயரை ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தலாம் என மத்திய அரசுக்கு சமூக நீதித்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக சமூக நீதித்துறை அமைச்சகம், ஓராண்டுக்கு முன்னதாக அமைச்சரவை குறிப்பை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.

இந்த நிலையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான கிரிமிலேயர் உச்சவரம்பு ரூ.6 லட்சத்தை ரூ.8 லட்சமாக உயர்த்த ஒப்புதல்  அளித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.