ஒடிசாவில் நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இந்துக்களுடன் இணைந்து முஸ்லிம்கள் தூய்மை பணியை மேற்கொண்டுள்ளனர். ஒடிசா மாநிலம் பாரிபாடாவில் பூரி ஜெகநாதர் கோவில் தேர் திருவிழாவை ஒட்டி இந்துக்களுடன் முஸ்லிம்களும் இணைந்து நேற்றிரவு தெருக்களைத் தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 

பூரி ஜெகநாதர் ஆலயத் திருவிழா மிகவும் பிரபலம். இத்திருவிழாவில் ஏரளாமானோர் கலந்துகொள்வர். இந்த ஆண்டுக்கான திருவிழா பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இந்நிலையில், திருவிழாவின் ஒரு பகுதியாக பகுடா யாத்ரா" என்ற பெயரில் தேர்திரும்பும் வைபவம் நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள். இதற்காக தெருக்களை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இதில் இந்துக்களுடன் இணைந்து இஸ்லாமிய இளைஞர்களும் தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 

இந்த தகவல் மற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தூய்மைக்கு மதம் எதுவும் இல்லை என்பதால், பரஸ்பரம் அனைவரும் இணைந்து பணியாற்றுவதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இதில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்ததற்கு நாங்கள் பெருமை கொள்கிறோம். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவே இதுபோன்ற பணிகளை மேற்கொள்கிறோம் என்றனர்.