ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருக்கும் ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு ஆந்திர மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து பெருமாளை தரிசனம் செய்கின்றனர். உலகின் பணக்கார கடவுளாக அறியப்படும் ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக நகை, பணம் என்று உண்டியலில் செலுத்துகின்றனர். சாதாரண நாட்களிலேயே அதிகமான கூட்டம் காணப்படும் நிலையில் விடுமுறை தினங்களில் பக்தர்கள் கூட்டத்தில் திருப்பதி நிரம்பி வழியும்.

இந்தநிலையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல சங்கராந்தி விழாவிற்காக சில தென்மாநிலங்களில் விடுமுறை விடப்பட்டிருக்கிறது. வார விடுமுறைகள் மற்றும் பண்டிகை நாட்களை கணக்கில் கொண்டு பக்தர்கள் திருப்பதியில் குவிந்துள்ளனர். வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் இருக்கும் அனைத்து அறைகளிலும் பக்தர்கள் நிறைந்து காணப்படுகின்றனர். இரண்டு கிலோமீட்டர் தூரத்தையும் கடந்து பக்தர்கள் வரிசையில் காத்திருக்கும் நிலையில் இலவச தரிசனத்திற்கு 20 மணி நேரத்திற்கு மேலாகிறது. 

அதே போல சிறப்பு தரிசனம், திவ்ய தரிசனம் மற்றும் டைம் ஸ்லாட் தரிசனத்தில் பக்தர்கள் 4 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் நிலை இருந்து வருகிறது.தொடர் விடுமுறை காரணமாகவே திருப்பதியில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படுகிறது. அடுத்து வரும் இரு தினங்களுக்கு மேலும் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்களுக்கு உணவு, குடிநீர் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளுக்கும் செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Also Read: கோர தாண்டவமாடிய கடன்தொல்லை..! மிட்டாய் வியாபாரி குடும்பத்துடன் தற்கொலை..!