தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரும், சாமியாருமான குர்மீத் ராம் ரஹீம் மீதான பாலியல் பலாத்கார வழக்கை விசாரித்த சி.பி.ஐ., அதிகாரிக்கு கடும் மிரட்டல் வந்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.5 ஆண்டுகளாக நிலுவை

குர்மீத் ராம் ரஹீம் மீது, அவரது ஆசிரமத்தை சேர்ந்த ஒரு பெண் சீடர் அனுப்பிய மொட்டை கடிதம் தான் இந்த பிரச்னையை வௌியே கொண்டு வந்தது. இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க, 2002ல் பஞ்சாப் - அரியானா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஆனால், ஐந்து ஆண்டுகளாக இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதன் பிறகு, 2007-ம் ஆண்டு, சி.பி.ஐ., அமைப்பின் டி.ஐ.ஜி., முலிஞ்சா நாராயணன் என்பவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த வழக்கை விசாரிக்க துவங்கினார். பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நாராயணன் அப்போது நடந்த சம்பவங்கள் குறித்து கூறியதாவது:

அடுத்தடுத்து நெருக்கடி

இந்த வழக்கை நான் விசாரிக்க தொடங்கியதுமே, எனது உயர் அதிகாரி சாமியார் மீதான வவழக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்' என, கூறினார். இந்த வழக்கு நீதிமன்றம் மூலம் என் கைக்கு வந்துள்ளது என்பதை மட்டும் அவருக்கு நினைவுப்படுத்தினேன்.

அதற்கு அடுத்த கட்டத்தில், அரியானா மாநிலத்தை சேர்ந்த பல எம்.பி.,க்கள் அரசியல்வாதிகள் கொடுத்த நெருக்கடிக்கும் நான் வளைந்து கொடுக்கவில்லை. தேரா சச்சா சவுதா அமைப்பினரும் என்னை மிரட்ட தொடங்கினர்.மாஜிஸ்திரேட் முன் வாக்குமூலம்

மொட்டை கடிதத்தை அடிப்படையாக வைத்து தான் இந்த வழக்கு போடப்பட்டதால் அந்த கடிதத்தை எழுதியது யார் என்பதை கண்டுபிடிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் சம்பந்தப்பட்ட பெண், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஹாேசியார்பூர் என்ற இடத்தில் இருப்பது தெரிய வந்தது.

விசாரணைக்கு ஒத்துழைக்க அப்பெண்ணை சம்மதிக்க வைக்க மிகுந்த போராட்டம் நடத்தினோம். விசாரணைக்கு ஒப்புக் கொண்ட அப்பெண், வாக்குமூலம் அளித்ததுடன், நீதிமன்றத்திற்கு வந்து சாட்சியமும் அளித்தார். அப்பெண் அளித்த வாக்குமூலத்தை ஒரு மாஜிஸ்திரேட் முன் பதிவு செய்தோம். 

அச்சப்பட்ட சாமியார்சாமியாரை விசாரணைக்கு உட்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.  கைகள் இரண்டையும் கட்டியபடி அவர் எங்கள் கேள்விகளை எதிர்கொண்டார். அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.

வெளியே அவர் அதிசயங்களை நிகழ்த்தும் நபராக தன்னை முன்னிறுத்தி கொண்டாலும், மனதளவில் அவர் மிகவும் அச்சப்படுகிறார் என்பதை விசாரணையின் போது உணர்ந்து கொண்டேன்.  நீதிமன்றம் தற்போது அளித்துள்ள தீர்ப்பு, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உணர்த்தியுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.