சாமானிய மக்கள் பயன்படுத்தும் 100 பொருட்களின் விலையை மறு ஆய்வு செய்ய ஜி.எஸ்.டி. கவுன்சில் குழுக்கூட்டம் செப்டம்பர் முதல் வராத்தில் கூட உள்ளது.

அந்த கூட்டத்தில் மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் பயன்படுத்தும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட உயர்ந்தபட்ச வரி குறைக்கப்படலாம் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக மாணவர்கள் பயன்படுத்தும் ‘ஸ்டேசனரி’  பொருட்களான ‘ஜியோமென்ட்ரிபாக்ஸ்’, ‘பென்சில் ஷார்ப்னர்’, ‘மை பேனா’, ‘பால்பாயின்ட் பேனா’ ஆகியவற்றுக்கு ஜி.எஸ்.டி. வரி 5 முதல் 12 சதவீதம் உள்ளது, நோட்டு புத்தகங்களுக்கு 18 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரிகள் குறைக்கப்படும் எனத் தெரிகிறது.

இது குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், “ மக்கள்  அதிகமாக நுகரும் சில பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி அதிகமாக இருப்பதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக மாணவரகள் பயன்படுத்தும் பொருட்களுக்கு அதிகமான வரி இருப்பதாகக் புகார் தெரிவிக்கின்றனர்.  மேலும், சில சிறு, குறு தொழில்நிறுவனங்களும் ஜி.எஸ்.டி. வரியை குறைக்க கோரியுள்ளன. இந்த வரிகளை குறைப்பது குறித்து விவாதிக்க அடுத்த மாதம் முதல்வாரத்தில் ஜி.எஸ்.டி. குழு கூடி விவாதிக்கும்’’ எனத் தெரிவித்தார்.

‘பிளேவுட்’, ‘பிளாஸ்டிக் ரெயின்கோட்’, ‘ஆயில் கேக்’ ஆகியவற்றை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு 28சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது, இது 18 சதவீதமாகக் குறைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 9-ந்தேதி ஐதராபாத்தில் கூடும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் அனைத்து வரி அம்சங்கள் குறித்து  ஆய்வு செய்யும். இதுவரை ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட வரிவிதிப்பில் இருந்து 80 பொருட்களுக்கும், 19 சேவைகளுக்கும் வரி குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.