நெல் விளைச்சல் அதிகரிக்க, விவசாயிகள் வயல்வெளியில் நின்றபடி வேத மந்திரங்களை முழங்கினால் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்று கோவா மாநில விவசாய துறை அமைச்ச்ர விஜய் சர்தேசாய் கூறியுள்ளார்.

கோவாவில் முதலமைச்சர் மனோகர் பரீக்கர் தலைமையிலான பா.ஜ. கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதில், கூட்டணி கட்சியான, கோவா முற்போக்கு கட்சியைச் சேர்ந்த விஜய் சர்தேசாய், விவசாய துறை அமைச்சராக உள்ளார். 

கோவாவைச் சேர்ந்த, 'சிவ யோகா பவுண்டேஷன்' என்ற அமைப்பு, அண்டவெளி விவசாயம் என்ற புதிய விவசாய முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தை விவசாய துறை அமைச்சர் விஜய் சர்தேசாய் துவக்கி வைத்ததார்.

இதன் பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்டவெளி விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்கள் பாதுகாப்பானவை. அவை, ரசாயன உரங்கள் கலக்காமல், நச்சுத்தன்மை அற்றதாக இருக்கும்.

விவசாயிகள் தங்கள் வயல்வெளியில் நின்று, 30 நிமிடங்கள், வேத மந்திரங்களை முழங்க வேண்டும். அதில் இருந்து உருவாகும் அண்ட சக்தியால், நெற்பயிர்கள் அமோக விளைச்சல் கொடுக்கும். 

இதற்கு, சிவயோக விவசாயம் என்று பெயர். இதனால், நிறைய விவசாயிகள் பலன் அடைந்து உள்ளனர். இந்த சிவயோக விவசாயம், எதிர்காலத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது என்று அமைச்சர் விஜய் சர்தேசாய் கூறினார்.