என் சாவுக்கு காரணம் மோடிதான் என கடிதம் எழுதி வைத்துவிட்டு விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் மாவட்டம் ரஜுர்வாதி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் பாவோ ராவ் சாயாரே. இவருக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவர் தனது நிலத்தில் பருத்தி உள்ளிட்ட பயிர்களைப் பயிரிட்டிருந்தார். பயிர்களைப் பூச்சி தாக்கியதால் அனைத்தும் நஷ்டமடைந்தன. இதனால் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் சில மாதங்களாக பெரும் மனஉளைச்சலில் இருந்து வந்தார்.

மற்றொரு பக்கம் குழந்தைகளின் படிப்புச் செலவுக்குப் பணம் இல்லாமலும் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமலும் சிரமப்பட்டுள்ளார். இவை அனைத்தும் ஒரே நேரத்தில் வந்ததால், விரக்தி அடைந்த சங்கர் அங்குள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். ஆனால், தூக்குக்கயிறு அறுந்துபோனதை அடுத்து, பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். தான் இறப்பதற்குமுன் சங்கர் கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார்.

அதில், விளைச்சலுக்காக அதிகளவில் கடன் வாங்கியிருந்தேன். ஆனால், விவசாயம் நஷ்டமடைந்ததால், அந்தக் கடனை திருப்பி அடைக்க முடியவில்லை. தனது கடன் பிரச்சினையிலிருந்து மீட்க அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளைச் சந்தித்தும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இதனால், நான் சாகும் முடிவுக்கு வந்துவிட்டேன். என் மரணத்துக்கு நரேந்திர மோடி அரசுதான் காரணம்என எழுதியிருந்தார்.

இதேபோல, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரகாஷ் மனோகர் என்பவர் தனது மரணத்துக்குப் பிரதமர் மோடிதான் காரணம் எனக் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டது மகாராஷ்டிராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், விவசாயி சங்கரின் குழந்தைகளின் படிப்புச் செலவை அரசே ஏற்கும் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.